கான்வே அதிரடி ஆட்டம் முதல் டி20ல் ஆஸி.யை நொறுக்கியது நியூசிலாந்து

தினகரன்  தினகரன்
கான்வே அதிரடி ஆட்டம் முதல் டி20ல் ஆஸி.யை நொறுக்கியது நியூசிலாந்து

கிறைஸ்ட்சர்ச்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில், டெவன் கான்வே அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து  53 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி.  அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து தொடக்க வீரர்கள் கப்தில் 0, செய்பெர்ட்  1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நியூசி. அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் வந்த வேகத்தில் 2 பவுண்டரிகளை விளாசினாலும், 12ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனால் நியூசி. 4 ஓவரில்  19 ரன்னுக்கு 3விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், டெவன் கான்வே - கிளென் பிலிப்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 74 ரன் சேர்த்தது. பிலிப்ஸ் 30 ரன் எடுத்து (20 பந்து, 3 சிக்சர்) ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில்  மிட்செல் மார்ஷ் வசம் பிடிபட்டார். கான்வே 36 பந்தில் தனது 3வது டி20 அரை சதத்தை நிறைவு செய்தார். கான்வே - நீஷம் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 47 ரன் விளாசினர். நீஷம் 26 ரன் எடுத்து (15பந்து, 3பவுண்டரி) பெவிலியன்  திரும்பினார். நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. கான்வே 99 ரன் (59 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் டேனியல் சாம்ஸ், ஜை ரிச்சர்ட்சன் தலா 2,  ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து  185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி, 17.3 ஓவரில் வெறும் 131 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. மிட்செல் மார்ஷ் 45 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 2  சிக்சர்), ஆஷ்டன் ஏகார் 23, ரிச்சர்ட்சன் 11, ஆடம் ஸம்பா ஆட்டமிழக்காமல் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். நியூசி தரப்பில் ஈஷ் சோதி 4 விக்கெட், சவுத்தீ, போல்ட் தலா 2 விக்கெட், சான்ட்னர், ஜேமிசன் தலா  ஒரு விக்கெட் எடுத்தனர். கான்வே ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி டுனடின் நகரில் பிப். 25ம் தேதி நடக்கிறது.ஐபிஎல் விலையும், ஆட்டமும்...* ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு நடக்கும் முதல் டி20 போட்டி இது. இதில் விளையாடிய ஆஸி. வீரர் ஜை ரிச்சர்ட்சன் 2 விக்கெட் மற்றும் 11 பந்தில் 11 ரன் எடுத்தார். அவரை 14 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. ஆர்சிபி 14.25 கோடிக்கு  வாங்கிய மேக்ஸ்வெல் ஒரு ஓவரில் 9 ரன் தந்ததுடன்,  பேட்டிங்கில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.* ஏலத்தில் 2வது அதிகபட்சமாக 15 கோடி கொடுத்து பெங்களூரு வாங்கிய கைல் ஜேமிசன் (நியூசி.) 3 ஒவரில் 32 ரன் தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். நியூசி. தரப்பில் அதிக ரன் விட்டுக் கொடுத்தவர் இவர்தான். * ஆட்ட நாயகன் விருது வென்ற கான்வே, அதிக விக்கெட் அள்ளிய ஈஷ் சோதி ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை