கல்வான் மோதலில் பலியான ராணுவ வீரர்களை இழிவு செய்ததாக 3 பேர் கைது: சீன அரசு அதிரடி

தினகரன்  தினகரன்
கல்வான் மோதலில் பலியான ராணுவ வீரர்களை இழிவு செய்ததாக 3 பேர் கைது: சீன அரசு அதிரடி

பீஜிங்: கல்வான் மோதலில் பலியான ராணுவ வீரர்களை இழிவு செய்ததாக சீனாவில் 3 பேர் கைதாகி உள்ளனர். கடந்த ஆண்டு லடாக், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய  தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். சீன தரப்பில் 4 வீரர்கள் பலியாகினர். இந்த விஷயத்தை கூட, 8 மாதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் சீன அரசு ஒப்புக் கொண்டது. அதோடு, பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலை, தியாகம் செய்த வீரர்களுக்கு உயரிய விருதை சீன அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சீன அரசு வெளியிட்ட வீரர்கள் பலி எண்ணிக்கை குறித்து சந்தேகம் கிளப்பிய 38 வயதான புலனாய்வு பத்திரிகையாளர் கியு  ஜிமிங் என்பவரை சீன அரசு கைது செய்துள்ளது. இவர் சீன வீரர்களை அவமதித்தாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதே போல், 28 மற்றும் 25 வயதுடைய இரு நபர்கள் வீ சாட்டில் சீன ராணுவ வீரர்களை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.சீன அரசு ஊடகங்கள் சீன ராணுவ  வீரர்களின் வீர தீரத்தைப் பாராட்டிப் பேசியதோடு, சீன வீரர்களை இழிவு படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் கூறி எச்சரித்திருந்தது. இதனால் கல்வான் சம்பவம் குறித்து சந்கேகம் கிளப்பினால் கைது என்ற நிலை நிலவி  வருகிறது.

மூலக்கதை