பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூரில் மு. க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதே போல தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 92. 59க்கும், டீசல் லிட்டர் ரூ. 85. 98க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் வாகன ஓட்டிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

அதுமட்டுமல்ல, வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது.

தற்போது ஒரு சிலிண்டர் ரூ. 785 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

பெட்ேரால், டீசல் விலை உயர்வால் வாகன கட்டணங்கள் அதிகரித்து அத்தியாவசிய பொருட்கள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
எனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.

இனிமேலும் விலையேறாமல் தடுத்திடவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தும், இதுபோன்ற விலையேற்றத்தை தொடர்ந்து செய்து வரும் மத்திய பாஜ அரசையும், அதனை கண்டிக்க முன்வராத அதிமுக அரசையும் கண்டிக்கும் வகையில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி, பங்களா புதூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மு. க. ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை அவர் எழுப்பினார்.

சென்னையை பொறுத்தவரை சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சின்னமலை அருகில் உள்ள வேளச்சேரி சாலையில் மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் பங்கேற்று கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, வாகை சந்திரசேகர் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. கே. நகர் தனசேகர், மகேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அணி அமைப்பாளர் ஏ. எம். வி. பிரபாகர் ராஜா, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், பெருங்குடி ரவிச்சந்திரன், மதிவாணன், பாலவாக்கம் விஸ்வநாதன், மணிமாறன், வேளச்சேரி பாஸ்கர், சைதை சம்பத், மேடவாக்கம் ரவி, சைதை அன்பரசன், விநாயக மூர்த்தி உள்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

சென்னை மேற்கு, சென்னை தென் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் சிற்றரசு, மயிலை த. வேலு தலைமையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் அண்ணாநகர் எம்எல்ஏ மோகன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மதன்மோகன், மா. பா. அன்புதுரை, கருணாநிதி, ஏழுமலை, பரமசிவம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், தி. நகர் லயன் பி. சக்திவேல் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது. மேலும் ஆட்டோவை மாட்டு வண்டியில் ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சென்னை கிழக்கு, சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் வங்கி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி. கே. சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன் எம்பி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ரங்கநாதன், ரவிசந்திரன், ஆர். டி. சேகர், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், வழக்கறிஞர் அணி அமைப்பளர் மருது கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தா. மோ. அன்பரசன், சுந்தரம், எம்எல்ஏக்கள் இ. கருணாநிதி, எஸ். ஆர். ராஜா, எழிழரசன், புகழேந்தி, எம்பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், திமுக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

.

மூலக்கதை