அஷ்வினுக்கு வாய்ப்பு மறுப்பு: கவாஸ்கர் கணிப்பு | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
அஷ்வினுக்கு வாய்ப்பு மறுப்பு: கவாஸ்கர் கணிப்பு | பெப்ரவரி 21, 2021

 ஆமதாபாத்: ‘‘ஒருநாள், ‘டுவென்டி–20’ அணிகளில் இனிமேல் அஷ்வின் இடம் பெறுவது கடினம்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். 

இந்திய அணி ‘நம்பர்–1’ பவுலர் அஷ்வின் 34. தமிழகத்தை சேர்ந்த இவர் 111 ஒருநாள், 46 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2017, ஜூலை 9 ல் விண்டீசிற்கு எதிரான ‘டுவென்டி–20’ ல் பங்கேற்றார். இதன் பின் டெஸ்ட் அணியில் மட்டும் தான் சேர்க்கப்படுகிறார். 

சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டது, சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டில் 17 விக்கெட் சாய்த்தார். தவிர பேட்டிங்கில் சதம் அடித்து அணிக்கு கைகொடுத்தார். இதனால் 4 ஆண்டுக்குப் பின் மீண்டு ம் ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஷ்வின் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.

இதுகுறித்து இந்திய அணி ‘ஜாம்பவான்’, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் அஷ்வினுக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இவ்வகை போட்டிகளில்  ‘நம்பர்–7’ இடத்தில் இடம் பெற இந்திய அணி நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை வைத்துள்ளது. அடுத்து ரவிந்திர ஜடேஜா வந்து விடுவார். பிறகு மூன்று வேகங்கள், ஒரு சுழல் என இடம் பெறுவர், அல்லது இரண்டு ‘வேகங்கள்’ ஒரு சுழல் பந்து வீச்சாளர் தான் சேர்க்கப்படுவார்.

இப்போதைய நிலையில் அஷ்வினின் அவசியம், இப்போதைக்கு இந்திய அணிக்கு தேவைப்படாது என நினைக்கிறேன். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு  தொடர்ந்து அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை