பறிபோன தோனியின் ‘உலக’ வாய்ப்பு * தேர்வுக்குழு புதிய தகவல் | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
பறிபோன தோனியின் ‘உலக’ வாய்ப்பு * தேர்வுக்குழு புதிய தகவல் | பெப்ரவரி 21, 2021

 புதுடில்லி: ‘‘கொரோனா வராமல் இருந்திருந்தால் 2020 உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் தோனி விளையாடி இருப்பார்,’’ என தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. கடந்த 2019 உலக கோப்பை அரையிறுதிக்குப் பின் சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்தார். எட்டு மாதங்களுக்குப் பின் 2020 ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வந்தார்.

திடீரென கொரோனா பரவல் ஏற்பட, ஐ.பி.எல்., தொடர், 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ‘டு வென்டி–20’ உலக கோப்பை தொடர்கள் ரத்தாகின. ஒருவழியாக 2020ல் ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதற்காக சென்னை வந்த தோனி,  ஒருநாள், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். 

இதுகுறித்து அப்போதைய தேர்வுக்குழு உறுப்பின் சரண்தீப் சிங் கூறியது:

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் தோனி கட்டாயம் விளையாட வேண்டும் என நாங்கள் அனைவரும் விரும்பினோம். உடற்தகுதியுடன் தயாராக இருந்த தோனி, விளையாடாமல்  இருந்திருந்தால் தான் வியப்பாக இருந்திருக்கும். ஏனெனில் எங்களைப் பொறுத்தவரையில் எத்தனை ஆண்டுகள் விளையாடுகிறார் என பார்க்க மாட்டோம். ‘பிட்னஸ்’ சரியாக இருந்தால் போதும். தோனியை பொறுத்தவரையில் பயிற்சிகளைக் கூட புறக்கணிக்க மாட்டார். காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்து பார்த்தது இல்லை. இதனால் தோனி மீது எல்லோருக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தது.

தவிர பல ஆண்டுகள் விளையாடினால் இந்தியாவுக்கு பல்வேறு தொடர்களில் கோப்பை வெல்ல முடியும் என நம்புவோம். தோனி ஏதோ ஒன்றிரண்டு கோப்பை மட்டும் வென்று தரவில்லை. இந்தியாவுக்கு இரு உலக கோப்பை உட்பட பல்வேறு தொடர்களில் சாதித்து கொடுத்தார். இவருக்கு இந்திய அணியில் விளையாடும் தகுதி உண்டு. ஆனால் திடீரென ஏற்பட்ட கொரோனா பரவல் அனைத்தையும் மாற்றி விட்டது. இது வராமல் இருந்திருந்தால் தோனி ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றிருப்பார். 

இவ்வாறு அவர் கூறினார். 

 

மூலக்கதை