இனிக்குமா ‘100’ * இஷாந்த் எதிர்பார்ப்பு | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
இனிக்குமா ‘100’ * இஷாந்த் எதிர்பார்ப்பு | பெப்ரவரி 21, 2021

ஆமதாபாத்:  டெஸ்ட் அரங்கில் இஷாந்த் சர்மா தனது 100 வது டெஸ்டில் பங்கேற்க காத்திருக்கிறார். 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அடுத்த இரு டெஸ்ட் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளன.

இதில் மூன்றாவது டெஸ்ட் வரும் 24ல் பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. இது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது.

கபில்தேவுக்கு (131) அடுத்து இந்த மைல்கல்லை எட்ட உள்ள இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற உள்ளார். தவிர சச்சின் (200), கும்ளே (132), ஹர்பஜனுக்கு (103) அடுத்து 100வது டெஸ்டில் பங்கேற்ற இந்தியர் ஆக காத்திருக்கிறார்.

இதுவரை 99 டெஸ்டில் 302 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர், பயிற்சியாளர் விஜய் தாகியா கூறியது:

டெஸ்ட் அரங்கில் 100 வது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியின் கடைசி வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா மட்டும் தான் இருப்பார். எனக்குத் தெரிந்தவரையில் இனிமேல் யாரும் 100 டெஸ்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் இப்போதுள்ள ‘வேகங்கள்’ ஐ.பி.எல்., தொடர், ஒருநாள், ‘டுவென்டி–20’ ல் பங்கேற்கத் தான் அதிக முன்னுரிமை தருகின்றனர். இவர்களால் 100 டெஸ்ட் வரை தாக்குப்பிடிக்க முடியாது. தனது 18 வயதில் தொடர்ந்து 8 முதல் 9 ஓவர்கள் 140 கி.மீ., வேகத்தில் பந்து வீசினார். இன்று 33 வயதான நிலையில் இன்னும் 130 கி.மீ., க்கும் மேல், தொடர்ந்து பல ஓவர்கள் பந்து வீசுகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை