அந்தி மாலை நேரத்தில்: ரோகித் சர்மா எச்சரிக்கை | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
அந்தி மாலை நேரத்தில்: ரோகித் சர்மா எச்சரிக்கை | பெப்ரவரி 21, 2021

ஆமதாபாத்: ‘‘பகலிரவு டெஸ்டில் மாலை நேரத்தில் ‘பேட்டிங்’ செய்யும் போது கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்,’’ என, ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் வரும் பிப். 24ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. இந்திய அணி இதுவரை ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் மட்டும் பங்கேற்றுள்ளது. தவிர, லண்டனில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2–1 அல்லது 3–1 எனக் கைப்பற்ற வேண்டும். தற்போது தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. எனவே இந்திய அணிக்கு மீதமுள்ள 2 டெஸ்டில், ஒரு வெற்றி, ஒரு ‘டிரா’ கட்டாயம் தேவைப்படுகிறது.

இதுகுறித்து இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா கூறியது: நான் ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளேன். ஆனால் அப்போது, சூரியன் மறையும் நேரத்தில் ‘பேட்டிங்’ செய்யவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் ‘பேட்டிங்’ செய்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது ‘பேட்டிங்’ செய்வது சற்று சவாலானது. ஏனெனில் வானிலை, ஒளி திடீரென மாறும். எனவே கூடுதல் எச்சரிக்கையுடனும், மிகுந்த கவனமுடனும் விளையாட வேண்டும். இந்த சவாலை அனைத்து பேட்ஸ்மேன்களும் அறிந்திருப்பர். இதனை கருத்தில் கொண்டு இதற்கேற்ப விளையாட வேண்டும்.

பொதுவாக புதிய மைதானத்தில் பகலிரவு டெஸ்டில் விளையாடும் போது ஒரு வித சவால் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் புதிய விளக்குகளின் கீழ் விளையாடுவது எளிதானதல்ல. இதற்கு தயாராகும் விதமாக இன்று முதல், இரவு நேரத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளோம். தவிர, இங்குள்ள இருக்கைகள் புதியவை என்பதால் மிகவும் பளபளப்பாக இருக்கும். இது, பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக அமையலாம். இதனை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற விரும்புகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. எனவே ஒவ்வொரு போட்டியாக திட்டமிட்டு விளையாடினால் போதுமானது. தற்போது கவனம் முழுவதும் மூன்றாவது டெஸ்டில் மட்டுமே உள்ளது.

இவ்வாறு ரோகித் கூறினார்.

மூலக்கதை