16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியாசீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்ட இருநாடுகளின் படைகளையும் விலக்கிக் கொள்ள இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16 மணி நேர பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா-சீன நாடுகளின் லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஒன்பதாவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை நடந்தது.



அதில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்தது.

இரு நாடுகளின் பீரங்கி டாங்கிகளும், போர் வாகனங்களும் அங்கு இருந்து திரும்பி செல்ல ஆரம்பித்தன. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதனை மக்களவையில் உறுதிப்படுத்தினார். பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகள் விலக்கப்படுவது தொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டது.

கல்வான் தாக்குதலில் தங்கள் தரப்பு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உயிரிழந்தனர் என்று சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையிலான 10ம் கட்ட பேச்சுவார்த்தை மோல்டோ எல்லைபகுதியில் நேற்று நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 4 மணி வரை சுமார் 16 மணி நேரம் நடந்தது.

இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் பி. ஜி. கே. மேனன் தலைமையிலான குழுவும், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின் தலையிலான குழுவும் பங்கேற்றன.

இதில், லடாக் எல்லையில் பாங்காக் ஏரி தவிர ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், கிழக்கு லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீன வீரர்கள் திரும்பி செல்லும்படி இந்திய சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்ட  இருநாடுகளின் படைகளையும் மற்ற பகுதிகளிலும் இருந்து முழுமையாக விலக்கிக் கொள்ள இருநாட்டின் ராணுவ அதிகாரிகள்  மட்டத்திலான 16 மணி நேர பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.   இதையடுத்து எல்லையில் இருந்து படைகளை உடனடி யாக வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் டுவீட்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவும், சீனாவும் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்துள்ளதாக ஊடகங்கள் ெதரிவிக்கின்றன.

அதாவது ஜூன் மாதத்தில், உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்று நாம் எடுத்துக்கொண்ட பகுதிகளை இந்தியா விட்டுவிட்டது. ஆனால் சீன ராணுவம் உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, நமது பக்கத்திலுள்ள டெப்சாங்கில் குடியிருப்புகளைக் கட்டியது.

அதன் நிலையென்ன? அமைதி. . . !’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதே விவகாரம் குறித்து ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தீர்க்கப்பட வேண்டிய புதிர்! சீன ராணுவம், உண்மை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியைக் கடந்து இந்தியாவின் பிரதேசத்திற்குள் நுழையவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

ஆனால் தற்போது, ‘இது அரசின் ராஜதந்திர வெற்றி; இந்தியப் பிரதேசத்திலிருந்து சீனா பின்வாங்கத் தொடங்கியுள்ளது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டும் உண்மையாக இருக்க முடியுமா?’ என்று பதிவிட்டுள்ளார்.



பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அடுத்தடுத்த சில நாட்களில் வெளியிட்ட டுவிட்டில், சீன ஆக்கிரமிப்பு குறித்து சந்தேகத்தை கிளப்பி  இருப்பதோடு மத்திய அரசை கிண்டல்  செய்திருப்பது   அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை