தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை

புதுடெல்லி: வரும் 25ம் தேதி 5 மாநில தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதால், நாளை மறுநாள் தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல்- மே மாதங்களில் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல்களை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான படைகளை அனுப்புவது குறித்து ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேசினர். அதன்படி, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் 250க்கும் மேற்பட்ட கம்பெனி படைகளை அனுப்ப உள்துறை முடிவு செய்துள்ளது.

இதில், சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ-திபத்தியன் எல்லை போலீசார், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், சாஸ்த்ரா ஷீமா பால் பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப்  பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இந்த வீரர்கள் வரும் 25ம் தேதிக்குள் அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களில் ஆய்வுகளை முடித்த நிலையில், வரும் 23ம் தேதி (நாளை மறுநாள்) டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர்.

அப்போது 5 மாநில தேர்தல் அட்டவணை தயாரிப்பு குறித்த முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின் வரும் 25ம் தேதி வாக்கில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை
பாஜக சார்பில் பிரதமர் மோடி தலைமையில் 5 மாநில தேர்தல் குறித்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ெதாடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், தேசிய தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், 5 மாநில தேர்தல் ெவற்றி குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை.


.

மூலக்கதை