புதுவை சட்டசபையில் நாளை பலப்பரீட்சை: டிஜிபி தலைமையில் பலத்த பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுவை சட்டசபையில் நாளை பலப்பரீட்சை: டிஜிபி தலைமையில் பலத்த பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2016 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், திமுக ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார்.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுங்கட்சியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது.
ஆனால் எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ் 7, அதிமுக 4 என 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர்.



பாஜகவைச் சேர்ந்த இவர்கள் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் தங்களின் பலம் 14 ஆக இருப்பதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், பாஜ மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் புதிய கவர்னராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜனிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினார். இந்த சந்திப்புக்குபின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் நாராயணசாமி 22ம்தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அதிரடியாக உத்தரவிட்டார்.



அதன்பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை தனித்தனியாக நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த முதல்வர் நியமன எம்எல்ஏக்களுக்கு, அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதியில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருந்தார். மேலும் கவர்னரே, நியமன எம்எல்ஏக்களை பாஜ பட்டியலில் சேர்த்து தெரிவித்திருப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழிசைக்கு கடிதம் எழுதினார்.

திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் கவர்னரின் இந்த செயலை விமர்சித்திருந்தனர். இதனிடையே சட்டசபை சிறப்பு கூட்டம் 22ம்தேதி (நாளை) காலை 10 மணிக்கு கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



இந்த நிலையில் நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் விவகாரத்தில் சபாநாயகர் வி. பி சிவக்கொழுந்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனிடையே இன்று மாலை முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இதில் நாளைய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது, சபையில் எவ்வாறு செயல்படுவது, நியமன எம்எல்ஏக்களுக்கான வாக்குரிமை தொடர்பாக விவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதன்பிறகு அரசுக்கான பெரும்பான்மை நிரூபிக்கும் விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி அதிரடி முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பை தைரியமாக எதிர்கொள்வாரா அல்லது கடைசி நேரத்தில் எடியூரப்பா பாணியில் ராஜினாமா முடிவுக்கு அவர் செல்வாரா, எம்எல்ஏக்களில் யாராவது கடைசி நேரத்தில் சபைக்கு வராமல் கல்தா கொடுத்து அதிர்ச்சி கொடுப்பார்களா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் சட்டசபையை சுற்றிலும் நாளை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.



சட்டம்-ஒழுங்கு பாதுகாத்தல், வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்தல் ஆகியவற்றுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா தலைமையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



எம்எல்ஏக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழசை உத்தரவிட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக மட்டுமின்றி, காங்கிரசும் முயற்சிப்பதாக தகவல் வெளியாகின.

இதையடுத்து கவர்னரின் உத்தரவுக்கிணங்க புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை