தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால் ரெய்டுக்கு தயாராகும் வருமான வரித்துறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால் ரெய்டுக்கு தயாராகும் வருமான வரித்துறை

* உள்ளூர் போலீசார் இல்லாமல் துணை ராணுவ பாதுகாப்புடன் நடத்த திட்டம்
* அமைச்சர்கள், கான்ட்ராக்டர்கள், பினாமிகள் தப்புவார்களா?

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநிலம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் உள்ளூர் போலீசார் இல்லாமல் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கான்ட்ராக்டர்கள், பினாமிகளின் வீடுகளில்தான் பணம் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 3ம் தேதி அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 10ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார். இங்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், வருமான வரி துறை உயர் அதிகாரிகள், அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள், எந்த தேதியில் தேர்தலை நடத்துவது, பதட்டமான வாக்குச்சாவடிகள், கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள், பண நடவடிக்கையை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தன.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, ”தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 45 துணை ராணுவ வீரர்கள் வருகிற 25ம் தேதி (வியாழன்) தமிழகம் வருகிறார்கள்” என்றார்.

ஒரு கம்பெனி என்பது 80 முதல் 85 வீரர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தேர்தல் பாதுகாப்புக்காக எவ்வளவு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள் என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பார். ஆனால், தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே துணை ராணுவ வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அதனால்தான் முன்கூட்டியே துணை ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கடந்த தேர்தலின்போது 103 கம்பெனி துணை ராணுவம் வந்தது.

ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 20 கம்பெனி வீரர்கள் வந்தனர். அதன்பின்னர் படிப்படியாக தேர்தல் நடக்கும் வரை வந்து கொண்டிருந்தனர்.

தற்போது மொத்தமாக 45 கம்பெனி வீரர்கள் வருகின்றனர்” என்றார். இது குறித்து மேலும் அதிகாரிகள் கூறும்போது, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தபோது, மாநிலம் முழுவதும் பண நடமாட்டம் உள்ளது.



பணத்தை பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளனர். அதை வருமான வரித்துறை அதிகாரிகள் தடுக்கவில்லை.

தாராளமான பண நடமாட்டம் உள்ளது என்று குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக உளவு தகவல்களை சேகரித்து வருகின்றனர். பெரிய அளவிலான சோதனைக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த சோதனையின்போது வழக்கமாக உள்ளூர் போலீசாரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் உள்ளூர் போலீசார், முக்கிய விஐபிக்களுடன் நெருக்கமாக உள்ளனர்.

இதனால் தகவல் முன்கூட்டியே கசிவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதனால் துணை ராணுவம் வந்தவுடன் அவர்கள் துணையுடன் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் சோதனை நடத்த தயாராகி வருகின்றனர் என்றனர்.

ஆனால், அமைச்சர்கள், அவர்களது பினாமிகள், கான்ட்ராக்டர்களிடம்தான் அதிக அளவில் பணம் குவிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் அவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவார்களா? அல்லது தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடத்துவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை