திமுக ஆட்சி மலரும்; மக்கள் கவலைகள் தீரும்; கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவினரின் கடன்தொகை முழுமையாக தள்ளுபடி: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக ஆட்சி மலரும்; மக்கள் கவலைகள் தீரும்; கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவினரின் கடன்தொகை முழுமையாக தள்ளுபடி: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி: ‘‘திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுவினர் வாங்கிய கடன்தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்’’ என பொள்ளாச்சி கூட்டத்தில் மு. க. ஸ்டாலின் கூறினார். கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சங்கம்பாளையம் ஆச்சிப்பட்டியில் இன்று காலை நடந்தது.

இதில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: பொள்ளாச்சி என்ற ஊர் பெயரை சொல்லவே வெட்கப்படுகிறோம். அந்த அளவுக்கு ஆளும்கட்சியினர் கேவலப்படுத்தி வைத்துள்ளனர்.



கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது,‘‘இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி. . . ’’ என்று பேசினேன். அது, உண்மை என இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அதிமுகவினரை சிபிஐ கைது செய்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை, நாங்கள் மகா யோக்கியன் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இப்போது, பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு அதிமுகவினர்தான் காரணம் என சிபிஐ உறுதிசெய்துள்ளது. இந்த வழக்கில், தற்போது கைதாகியுள்ள மூன்று அதிமுகவினரில், அருளானந்தம் என்பவர், அதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்தவர்.



உள்ளூர் அமைச்சர் வேலுமணியுடன் பல்வேறு விழாக்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இவரைப்போலவே பாபு, ஹெரன்பால் ஆகிய இருவரும் ஆச்சிப்பட்டியை சேர்ந்த அதிமுக ஊராட்சி தலைவருடன் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர்களை காப்பாற்ற அதிமுக மேலிடம் கடும் முயற்சி மேற்கொண்டது.

இந்த விவகாரத்தை திமுக கையில் எடுத்து பல போராட்டம் நடத்தியது. அதன்பிறகு, தற்போது 3 அதிமுகவினர் கைதாகியுள்ளனர்.

இந்த பாலியல் வழக்கில், அதிமுகவை சேர்ந்த ‘பார்’ நாகராஜ் என்பவருக்கும் ெதாடர்பு உள்ளது என நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டேன்.

இவரும், அமைச்சருக்கு நெருக்கமானவர்தான்.

நான் அறிக்கை விட்ட பிறகுதான் ‘பார்’ நாகராஜை அதிமுகவை விட்டு நீக்கினார்கள். திருநாவுக்கரசு என்பவர் இக்குற்றச்செயலில் முக்கியமானவர்.

அவரை கைது செய்யவில்லை. இதுபற்றியும் நான் அறிக்கை வெளியிட்டேன்.

அதன்பிறகுதான் அவரை கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் தற்போது ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த கார் எண் டி. என். 02 ஏஎஸ்0222. இந்த காரில்தான் பெண்களை கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த கார், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜ் என்பவர் பெயரில் உள்ளது.

இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

இப்படி பேசுவதால், என் மீது வழக்கு போடுங்கள், தைரியம் இருந்தால் வழக்கு போட்டுப்பாருங்கள். அந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

அதிமுகவினர் வைத்த விளம்பர பலகை சரிந்து விழுந்து சென்னையை சேர்ந்த சுப உயிரிழந்தார். கோவையை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண் தனது கால்களை இழந்தார்.

நீட் தேர்வு கொடுமை காரணமாக, அனிதா உள்ளிட்ட பல மாணவிகள் தற்ெகாலை செய்தனர். சேலம் எட்டுவழிச்சாலைக்கு விளைநிலத்தை கைப்பற்ற கூடாது என போராட்டம் நடத்திய பெண் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதுதான் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா?

திமுக ஆட்சியில், பெண்கள் நலனுக்கு ஏராளமான திட்டம் கொண்டுவரப்படும். திமுக ஆட்சியில், மகளிர் குழு சீரமைக்கப்படும்.

கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரை வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவினர் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

இதை முதல்வர் கேட்டுக்கொண்டே இருப்பார். நாளையே தள்ளுபடி செய்தாலும் செய்து விடுவார்.

இதை, நான் சொன்னால், அவருக்கு கோபம் வந்துவிடுகிறது. கோபம் வந்தாலும் பரவாயில்லை.

அதுதான் உண்மை. நாளை திமுக ஆட்சி மலரும்.

மக்களின் கவலைகள் யாவும் தீரும்.

இவ்வாறு மு. க. ஸ்டாலின் பேசினார்.

.

மூலக்கதை