சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது

புதுடெல்லி: ‘மீடூ’ புகாரில் சிக்கிய அமெரிக்காவின் ஹார்விக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவில் முன்னாள் அமைச்சர் அக்பர் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இருந்தும் இந்தியாவில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டோரின் குமுறல்கள் தொடர்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ‘மீடூ’ என்ற பெயரில் கடந்த 2018ல் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ‘மீடூ இந்தியா’ ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்படைந்தனர். அந்த வகையில் ஆளும் பாஜகவின் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த எம். ஜே. அக்பர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் பிரியா ரமணி குற்றம்சாட்டினார்.

இவர் மட்டுமன்றி மேலும் பல பெண்கள் எம். ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சுமத்தினர்.

அப்போது வெளிநாட்டில் அரசு முறை பயணமாக சென்றிருந்த எம். ஜே. அக்பர், இந்தியா திரும்பியதும் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு முன்பாக, தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக பிரியா ரமணி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.


 கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ரவீந்திரகுமார் பாண்டே அளித்த தீர்ப்பில், ‘தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் எத்தனை ஆண்டுகள் கழித்தும் புகார் கூறலாம். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கு நேர்ந்த பிறகு மனதளவில் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக அதுகுறித்து பல ஆண்டுகள் அவர்கள் வாய் திறக்காமல் இருக்கலாம். அதனை இந்த சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு பெண் குரல் எழுப்பியதற்காக அவரை தண்டிக்க முடியாது.

சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் உள்ள நபரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட வாய்ப்புள்ளது. கண்ணியத்துக்கான உரிமையை விலையாக கொடுத்து நன்மதிப்புக்கான உரிமையை பாதுகாக்க முடியாது.

இந்த வழக்கில் பிரியா ரமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எம். ஜே. அக்பர் சக்தி வாய்ந்த மனிதராக இருந்தபோதிலும், சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட மாட்டார் என்று கூற முடியாது.

எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பு வழங்கியதுடன் எம். ஜே. அக்பருக்கு அறிவுரையும் வழங்கினார். இந்த வழக்கின் தீர்ப்பு கிட்டதிட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பின் வெளியான நிலையில், எம். ஜே. அக்பர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீதா லூத்ரா, ‘பிரியா ரமணியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால், எனது கட்சிக்காரரின் கவுரவம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.



ஆனால், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அந்த வாதங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எம். ஜே. அக்பர் பிரபல பத்திரிக்கை நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இருந்த போதுதான், அவர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும், கிட்டத்திட்ட 20 ஆண்டுகளுக்கு பின் பிரியா ரமணி போன்றோர் கொதித்து எழுந்தது, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

‘மீடூ’ ஹேஷ்டேக் உலகளாவிய இயக்கமாக மாறுவதற்கு காரணமாக இருந்ததே ‘ஹாலிவுட்’ பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது பல பெண்கள் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள்தான். தற்போது இந்தியாவில் எம். ஜே. அக்பர் தொடுத்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், ஹார்வி வெய்ன்ஸ்டீன் வழக்கு என்ன ஆனது? என்ற கேள்வியும் எழுகிறது.

ஹார்வி வெய்ன்ஸ்டீன் வீழ்ந்த கதை அக்டோபர் 2017ல் தொடங்குகிறது.


 அக்டோபர் 5, 2017 அன்று, இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் ஜோடி கான்டர், மேகன் டுவோஹே ஆகியோர், ஹார்விக்கு எதிராக எழுதிய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது.
இந்த பத்திரிகையில் கட்டுரை வெளியாவதற்கு முன் இந்த இரண்டு பெண்களும், நாடு முழுவதும் சுற்றித் திரிந்து அவரால் பாதிக்கப்பட்ட ெபண்கள் பட்டியலை சேகரித்தனர். அதன்பின்னரே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையை வெளியிட்டனர்.

இந்த கட்டுரை வெளியான பின்னர், மேலும் சில பெண்கள் அவருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை ‘மீடூ’வில் தெறிக்கவிட்டனர். இது, ஹார்வியை நிலைகுலைய செய்தது.

கிட்டதட்ட 17 நாட்களுக்குள், மொத்தம் 106 பெண்கள் ஹார்வி மீது பாலியல் துன்புறுத்தல் புகாரும், 20 பெண்கள் பாலியல் பலாத்கார புகாரும் கூறினர்.

இவ்வாறாக பத்திரிகையில் செய்தி வெளியான பின்னர், ஹார்வியின் வழக்கறிஞர் ஒருவர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், ‘ஹார்வி மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’ என்று தெரிவித்தார். இருந்தும், பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டவில்லை.

மேலும், காவல்துறையிடமும் எவ்வித புகார்களும் அளிக்கவில்லை. ஆனால், பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் நியூயார்க் காவல்துறை, லண்டன் பெருநகர காவல்துறை, லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆகியவை ஹார்விக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய தொடங்கின.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய வாக்குமூலங்களை பெற்றன.

தொடர்ந்து நவம்பர் 3, 2017 அன்று, நியூயார்க் காவல்துறை ஹார்விக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தயாரித்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. மே 25, 2018 அன்று, நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில், பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஹார்வி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

அதையடுத்து ஹார்வி கைது செய்யப்பட்டார். அதே நாளில் ஒரு மில்லியன் டாலர் (ரூ. 7 கோடியே 28 லட்சம்) செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் உறுதியாவதற்கு கிட்டதிட்ட 21 மாதங்கள் ஆகின.

கிட்டதிட்ட ஆறு பெண்கள் நீதிமன்றத்தில் தங்கள் சாட்சியங்களை வழங்கினர். பிப்ரவரி 24, 2020 அன்று மற்றொரு பலாத்கார வழக்கில் ஹார்வி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

பின்னர் மார்ச் 11, 2020 அன்று ஹார்விக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது ஹார்வியின் வயது 67 ஆக இருந்தது.

உடல்சார்ந்த பல நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாளில் குற்றவாளியான ஹார்வி, நீதிபதியிடம், ‘எனது வயது மற்றும் நோயைக் கருத்தில் கொண்டு எனக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும்’ என்று கேட்டார்.



ஆனால், நீதிபதி அவருக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. இப்போது அவர் நியூயார்க்கில் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

23 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதால், அவர் தனது  வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவ்வாறாக ‘மீடூ’ விவகாரத்தில் அமெரிக்காவின் ஹார்வியின் கதைக்கும், இந்தியாவின் எம். ேஜ. அக்பரின் கதைக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால், இரண்டும் ஒன்றுதான்.

இரண்டும் பாலியல் வேட்டைதான்; இருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியானவைதான். ஆனால், இரு நாடுகளின் போலீஸ் மற்றும் நீதி அமைப்பின் நடைமுறைகள் தான் வெவ்வேறாக உள்ளன.

இருந்தும், சக்தி வாய்ந்த நபராக கருதப்படும் எம். ஜே. அக்பர் தொடுத்த அவமதிப்பு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் என்ற அடிப்படையிலும், மற்ற பெண்களுக்காகவும் வழக்கு தொடர்ந்த பிரியா ரமணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் கூட, பெண்களுக்கு ஆதரவான கருத்துகளே வெளியிடப்பட்டன. அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற விவகாரத்தில் பத்திரிகையில் வெளியாகும் செய்தியின் அடிப்படையில் போலீஸ் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து குற்றவாளிக்கு தண்டனை ெபற்றுத் தந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம். ேஜ. அக்பர் போன்றோர், குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நபர்களாகத் தான் இன்றும் உலா வருகின்றனர்.

காரணம், அவர்களுக்கு பின்புலத்தில் உள்ள அரசியல் பலமும், சட்ட பாதுகாப்பும்தான் என்பதே உண்மை.

இரு வழக்கிலும் கவனிக்கப்பட வேண்டியவை எது?

* ஹார்வி வழக்கில் அவருக்கு எதிராக ஆறு பெண்கள் சாட்சியம் அளித்தனர். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் வயது அப்போது 20 முதல் 30க்குள் இருந்தது.


* பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? என்ற ேகள்விகள் இரு வழக்கிலும் எழுப்பப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் சொந்த கதைக்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.
* சாட்சியம் கூறிய பெண்களின் வாக்குமூலமே சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் தனது முடிவில் ‘சாட்சியம்தான் சான்று’ என்று தெளிவுபடக் கூறியது.

* இரு வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் காவல்துறை அல்லது நீதிமன்றத்திற்கு செல்லவில்லை.

அவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த பின்னர்தான் காவல்துறையும், நீதிமன்றமும் அவர்களிடம் சென்றன.
* ‘மீடூ’ இயக்கத்தின் ஒளி உலகம் முழுவதும் பரவிய போது, அது இந்தியாவிலும் சக்திவாய்ந்த சில மனிதர்களை அடையாளம் காட்டியது.

பல பெண்கள் தங்களது மவுனத்தை பொதுவெளியில் வெளியிட்டனர்.
* சமூக ஊடகங்கள் தான் ‘மீடூ’ இயக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் துயர வரலாற்றை கேட்டன.



* இந்தியாவில் பெண்கள் மீடூ-வில் தங்களது மவுனங்களை கலைத்தாலும் கூட, எந்த போலீசாரும், நீதிமன்றமும் அவர்களின் கதையை கேட்கவில்லை.
* அமெரிக்காவில் பத்திரிகை செய்தி அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிந்தது.

ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. பிரியா ரமணிதான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கான காரணம், பாலியல் துன்புறுத்தலில் யார் குற்றவாளி என்ற கேள்வி எழுந்ததால், அவர் நீதிமன்றத்தை நாடினார்.
* அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் உள்ளார்.

ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்கள் தான் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

.

மூலக்கதை