22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

புதுச்சேரி: புதுவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு, கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில் பாஜ நியமன எம்எல்ஏக்களை வாக்கெடுப்பில் அனுமதிக்காமல் தடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் நாராயணசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நாராயணசாமி நிரூபிப்பாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

கடைசி கட்டமாக ஆட்சியை காப்பாற்ற அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். புதுவையில் 2016 சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் திமுக ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது.

முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார்.

அவரது அரசுக்கு காங்கிரஸ்-15, திமுக-3, சுயேட்சை-1 என மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.

எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)-3 என மொத்தம் 14 பேர் உள்ளனர். இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு பதவி பறிக்கப்பட்டது.

மேலும் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் பலம் 28 ஆக குறைந்தது.

இருதரப்பும் சம பலத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக ரங்கசாமி தலைமையில் கவர்னர் மாளிகை சென்று முதல்வர் நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில் கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு நியமிக்கப்பட்ட புதிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா முடிந்த நிலையில் நேற்று பிற்பகலில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், பாஜக எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு முதல்வர் நாராயணசாமியை, கவர்னர் அழைத்து பேசினார்.

இந்த சந்திப்பு முடிந்தபின் கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வெளியானது. அதில், மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கவர்னர், முதல்வருக்கு கீழ்க்காணும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

* புதுச்சேரி சட்டசபை வருகிற 22ம்தேதி கூட்டப்பட வேண்டும்.

இந்த சட்டமன்ற கூட்டம் முதல்வர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க மட்டுமே கூட்டப்பட வேண்டும். வாக்கெடுப்பு கைகளை உயர்த்தும் நிலையில் இருக்க வேண்டும்.
* சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பானது அன்று மாலை 4 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவோ, தள்ளி வைக்கப்படவோ கூடாது.
* சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியாக நடைபெற சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகளும், சட்டசபை செயலாளரும் மேற்கொள்ள வேண்டும்.

* மேலும் சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் யாருடைய தடையும், கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க தேவையான நடவடிக்கைகளை தலைமை செயலாளரும், போலீஸ் டிஜிபியும் மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் தினத்தன்று புதுவை மாநிலம் முழுவதிலும் தேவையான சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவை சட்டசபையை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 30 பேரும், மத்திய அரசால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களும் இருந்தனர்.

தற்போது 28 பேர் மட்டுமே உள்ள நிலையில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என தெரிவித்து இருந்தார்.

ஆனால் இவ்விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி ஒருமித்த கருத்தில் இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை தவிர, நியமன எம்எல்ஏக்கள் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என தனது தனிப்பட்ட கருத்தாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இருப்பினும் இவ்விவகாரத்தில் சபாநாயகர் வி. பி சிவக்கொழுந்து எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.



.

மூலக்கதை