குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து: தென்காசியில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து: தென்காசியில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

தென்காசி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பள்ளிவாசல் முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தபோது பேசியதாவது: சிலர் தேர்தல் வந்தால் மக்களை தேடுகின்றனர்.

தேர்தலுக்கு பிறகு மறந்து விடுகின்றனர். தமிழகத்தில் 1100 என்ற செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் செல்போனிலிருந்து அழைத்து குறைகளை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். இதுவரை 60 ஆயிரம் பேர் தங்களது குறைகளை இந்த எண் மூலமாக பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் யார் என்ற சந்தேகம் வேண்டாம். நான் தான் முதல்வர்.

சாதாரண கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக பல பதவிகள் பெற்று தற்போது முதல்வராகி இருக்கிறேன். அதிமுகவில் தான் சாமானியர்கள் எந்த உயர் பதவிக்கும் வர முடியும்.

நான் முதல்வரானதும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

முதல்வர் பதவி என்பது ஒரு பணி மட்டுமே.

நாட்டு மக்கள் போடுகின்ற உத்தரவை செயல்படுத்தும் பணி. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த போது நாடு முழுவதும் அதற்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பொதுமக்களுக்கு, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்குகள், காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்குகள் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது.

மேலும் நோய்த் தொற்று ஊரடங்கு சமயத்தில் ஊரடங்களை மீறியதாக 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவற்றில் வன்முறையில் ஈடுபட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ. பாஸ் பெற்று பயன்படுத்தியது, காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் பொதுமக்கள் நலன் கருதி கைவிடப்படுகிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை