தேர்வு செய்யப்பட்ட அரசுடன் இணக்கமாக செயல்படுவேன்: புதுச்சேரி கவர்னர் தமிழிசை பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்வு செய்யப்பட்ட அரசுடன் இணக்கமாக செயல்படுவேன்: புதுச்சேரி கவர்னர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: தேர்வு செய்யப்பட்ட அரசுடன் இணக்கமாக செயல்படுவேன் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளபடியே இன்றைக்கு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளேன். ஏனெனில் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது.

புதுச்சேரி மக்களுக்கு உதவ வேண்டும். சேவை செய்யவேண்டும்.

அன்போடு பழக வேண்டும் என்ற நோக்கத்தில் இங்ேக வந்துள்ளேன். நான் ஒரு ஆளுநர் என்றாலும் நான் ஒரு மகப்பேறு மருத்துவர்.

புதுச்சேரி, தெலங்கானா என்ற இரட்டை குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரியும். எனவே, இருவரையும் சரியான அளவில் பாதுகாப்பேன்.

புதுச்சேரியில் எனது முதல் பணி கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் இருக்கும்.
நான் பொறுப்பேற்ற பிறகு முதல் கையெழுத்தாக, சாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் நலனிற்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்து போட்டுள்ளேன். அடுத்ததாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளேன்.

புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, புதிதாக ெதாழிற்சாலை கொண்டு வருவது, சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் திட்டங்களை முன்னெடுப்பது போன்றவற்றின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும் என்ற உந்துதலோடு செயல்படுவேன். புதுச்சேரி மக்களின் நலனுக்காக பணியாற்றும் ஆளுநராகவும், மக்கள் கவர்னராகவும் இருக்க விரும்புகிறேன்.

நான் அனைவருக்கும் சமமானவள், பொதுவானவள், அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுவேன். தற்போது, எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக அலசி ஆராய்ந்து அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு முடிவு செய்வேன்.
மக்களுக்கும் எனக்கும் எந்த இடைவெளியும் இருக்க கூடாது என நினைக்கிறேன்.

மக்கள் என்னை சந்திக்க தடை ஏதும் இல்லை. கடந்த காலத்தில் கவர்னராக இருந்தவர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யக் கூடாது.

யாருடைய அதிகாரத்தையும் பறித்து கொள்ளவோ?, அவர்களது அதிகாரத்தில் தலையிடவோ மாட்டேன். அவரவர்களுக்கு எந்த அதிகாரம் இருக்கிறதோ அதற்கு உட்பட்டு நடந்து கொள்வேன்.

தேர்வு செய்யப்பட்ட அரசுடன் இணக்கமாக இருப்பேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்து கொள்வேன்.

அரசியல் உள்நோக்கத்துடன் நான் இங்கு வரவில்லை. என்னால் எந்த அளவுக்கு மக்களுக்கு பணியாற்ற முடியும் என்பதிலேயே என் கவனம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

.

மூலக்கதை