தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப் பேரவையில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது: முதல் நாளான இன்று ஆர்வமுடன் குவிந்த தொண்டர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ்நாடுபுதுச்சேரி சட்டப் பேரவையில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது: முதல் நாளான இன்று ஆர்வமுடன் குவிந்த தொண்டர்கள்

சென்னை: தமிழ்நாடு- புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை ஆர்வமாக பெற்றனர்.   முதல்நாள் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழ்நாடு-புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தொகுதிகளில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை இன்று முதல் வரும் 24ம் தேதி வரை பெறலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.   இதில் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதி ரூ. 25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000.

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் விருப்ப மனுக்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான திமுகவினர் விண்ணப்பப்படிவங்களை பெற ஆர்வமுடன் குவிந்தனர்.

இன்று காலை 9. 30 மணி முதல் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி தொடங்கியது.

திமுகவினர்  விண்ணப்பபடிவங்களை தலைமைக் கழகத்தில் ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொண்டனர்.

.

மூலக்கதை