கிரண்பேடி மாற்றம் ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரண்பேடி மாற்றம் ஏன்?

புதுச்சேரி: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பு ஏற்பதற்கு முன் மே மாதம் 28ம் தேதி, துணை நிலை ஆளுநராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஜூன் 6ம் தேதி கடற்கரை காந்தி திடலில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஒருசில மாதங்களில் கவர்னர் மற்றும் முதல்வர் இடையே அதிகார மோதல் வெடித்தது. தொடர்ந்து, இருவரும், மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

இதன் உச்சகட்டமாக கவர்னருக்கு ஆய்வு நடத்த அதிகாரம் இல்லை. தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளில் தலையிட அதிகாரம் இல்லை என கூறி, முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான தெளிவான உத்தரவு ஏதும் இல்லை.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரலாம் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது, பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துணி வழங்குவது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது, உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோப்புகள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக மக்கள் நல திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் 39 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கவர்னர் மாளிகை முன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். கையெழுத்து இயக்கம், தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களும் நடந்தது.

குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தை சந்தித்து முதல்வர், அமைச்சர்கள் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை விதித்தாலும், குறிப்பாக இலவச அரிசி, கட்டாய ஹெல்மெட் விவகாரம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கை பாஜகவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.



அவரின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றியது. பாஜக கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி புதுச்சேரி பாஜகவினர் 5 முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுச்சேரிக்கு தனியாக துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படும் வரை தமிழிசையே கூடுதல் பொறுப்பாக இதனை கவனித்து கொள்வார் என குடியரசு தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவு நேற்று இரவு வெளியானது.

ஆளும் கட்சி மற்றும் பாஜகவின் அழுத்தம் காரணமாக கவர்னர் கிரண்பேடி இப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை