சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது போல் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது போல் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்தாண்டு மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலை சம்பவம் பாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அவரது மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்தின் மறைவுக்கு அவரது காதலி ரியா தான் காரணம் என்று சுஷாந்தின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, இவ்வழக்கின் தொடர்ச்சியாக பாலிவுட் பிரபலங்கள் பலர் போதை பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சுஷாந்தின் தற்கொலைக்கும், போதை பொருள் வழக்குக்கும் தொடர்பு இருப்பதால், பாலிவுட் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில் எம். எஸ். தோனியின் படத்தில் சுஷாந்திற்கு நண்பனாக நடித்திருந்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார், நேற்று மாலை மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணம், பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகவலறிந்த போலீஸ் டிஜிபி விஷால் தாக்கூர் தலைமையிலான போலீசார்  சந்தீப் நஹாரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து  விஷால் தாக்கூர் கூறுகையில், ‘சந்தீப்பின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில்  இருப்பதாக அவரது மனைவி காஞ்சன்  தகவல் கொடுத்தார்.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சந்தீப்பின் சடலம்  கைப்பற்றப்பட்டு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’  என்றார்.


முன்னதாக சந்தீப் நஹார் வெளியிட்ட 9 நிமிட தற்கொலை குறிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ‘நான் வாழ விரும்பவில்லை; எனது வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கண்டேன்.

ஒவ்வொரு முறையும் சிக்கலை எதிர்கொண்டேன். இன்று நான் எடுத்துள்ள முடிவு கோழைத்தனம் என்பது எனக்கும் தெரியும்.

நானும் வாழ விரும்பினேன். ஆனால், எனது வாழ்க்கையில் அமைதியும், சுய மரியாதையும் இல்லை.

எனது மனைவி காஞ்சன் சர்மா மற்றும் அவரது தாயார் வுனு சர்மா ஆகியோரை புரிந்து கொள்ள முடியவில்லை. என் மனைவிக்கும் எனக்கும் தினசரி சண்டை ஏற்படுகிறது.

அவளிடம் தினமும் சண்டையிட்டுக் கொள்ளும் மனநிலையில் நான் இல்லை.

அது அவளது இயல்பாக மாறிவிட்டது. ஆனால் இது காஞ்சனின் தவறு அல்ல.

நான் பல ஆண்டுகளாக மும்பையில் வசிக்கிறேன். மிகவும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டேன்.

ஆனால் ஒருபோதும் எனது மனம் உடையவில்லை. திருமணமான 10 ஆண்டிற்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளில் எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

இந்த விஷயங்களை என்னால் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்களை பார்க்கும் போது அவர்களின் போலித்தனமாக, பொய்யான வாழ்க்கையை பார்க்கும் போது எனக்குள் வெறுப்பு ஏற்படுகிறது.

நான் தற்கொலை செய்து கொள்வது பற்றி என் மனைவியிடம் 100க்கும் மேற்பட்ட முறை கடந்த 2 ஆண்டுகளில் சொல்லியுள்ளேன்.

என் பெற்றோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நான் விரும்பிய அனைத்தையும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

நடிகராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றினார்கள். இன்று நான் உயிருடன் இருப்பது அவர்களால் தான்.

இப்போதைக்கு என் பெற்றோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் இதயத்தை காயப்படுத்தி விட்டேன்.

அவர்களுக்கு பெருமை சேர்க்க நான் இங்கு வந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை.

எனது திருமண வாழ்க்கையே என்னை மாற்றியது.

இனி வாழ ஆசை இல்லை. மும்பை எனக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தது.

இந்த கனவு நகரத்திற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். பாலிவுட்டிலும் நிறைய அரசியல் இருக்கிறது.

எனது தற்கொலைக்கு பின் மனைவி காஞ்சனை யாரும் திட்ட வேண்டாம். அவளுக்குள் அதிக கோபம் உள்ளது.

அதனால் அது கத்துகிறது. அவள் ஒருவிதமான கற்பனை வாழ்க்கை வாழ்கிறாள்.

எனது மரண வழக்கில் பின்னணியில் என் மாமியார் உள்ளார் என்பதை போலீசாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப்பில் இருந்து மும்பைக்கு காஞ்சனை அழைத்து வந்தேன்.

அவள் என்னுடன் 10 ஆண்டாக வாழ்ந்தாள்.

என் மீது சந்தேகமடைகிறாள். எனது கடந்த கால வாழ்க்கையை கேலி செய்யாதீர்கள்.

அதுதொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டாம். எனது அத்தியாயம் மூடப்பட்டது.

உண்மையில், நான் காஞ்சனின் வாழ்க்கையில் ஒரு வில்லன். அவள் என்னைப் பற்றி மிகவும் மோசமாக நினைக்கிறாள்.

என்னைப் பற்றி மற்றவர்களிடம் நான் மனிதனல்ல; ஒரு பேய் என்று கூறுகிறாள். நான் கடந்த 2 ஆண்டுகளாக நரக வாழ்க்கை வாழ்ந்தேன்.

தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் மனதை புண்படுத்தும்படி நடந்து கொண்டிருப்பேன் என்றால் அவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழ விரும்பினால், அதனை மற்றவர்களுக்கு கொடுங்கள். பிடிவாதத்தால் அன்பை அடைய முடியாது.

அன்பினால் தான் அன்பை அடைய முடியும். தற்கொலை சூழலில் சிக்கிக் கொண்டேன்.

இனி என்னால் வெளியே வரமுடியாது. மகிழ்ச்சியோடு தற்கொலை செய்து கொள்கிறேன்.

என் வாழ்க்கையில் நிறைய நரகங்களை கண்டேன். ஒருவேளை இங்கிருந்து சென்ற பின் என் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

மன்னிக்கவும்’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை