இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: ‘ஸ்டிக்கர்’ இல்லை என்றால் 2 மடங்கு அபராதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: ‘ஸ்டிக்கர்’ இல்லை என்றால் 2 மடங்கு அபராதம்

புதுடெல்லி: இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாகிறது. அதனால், பாஸ்டேக் ‘ஸ்டிக்கர்’ ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் `பாஸ்டேக்’ நடைமுறை கடந்த 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள முடியும். மேலும் எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, பேடிஎம் மற்றும் ஐடிஎப்சி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் இதர இணைய சேவை வழியாக பாஸ்டேக் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டது.



இவ்வாறாக பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம்.

‘பாஸ்டேக்’ முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு  கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில், பிப்.

15ம் தேதி (இன்று) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளின் அனைத்து பாதைகளிலும் 15ம் தேதி (இன்று) நள்ளிரவு முதல் பாஸ்டேக் நடைமுறை கட்டாயமாகிறது.

‘பாஸ்டேக்’ இல்லாத வாகன உரிமையாளர்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும், காத்திருக்கும் நேரம், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தடையற்ற பயணத்தை மேற்கொள்ளவும் இதை அமல்படுத்துகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் கூறுகையில், ‘பாஸ்டேக் நடைமுறைக்கான கால அவகாசம் இனி அளிக்க முடியாது. தற்போது 90 சதவீத வாகனங்களில் `பாஸ்டேக்’ அட்டை ஒட்டப்பட்டுள்ளது.

அனைத்து வாகன ஓட்டிகளும் உடனடியாக `பாஸ்டேக்’ அட்டை வாங்க வேண்டும்’ என்றார். இன்று நள்ளிரவு முதல் ‘பாஸ்டேக்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களிடம் 2 மடங்கு அபராதம் வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



.

மூலக்கதை