டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடியவிடிய பீதி: வீட்டில் தூங்க முடியாமல் மக்கள் தெருக்களில் தஞ்சம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடியவிடிய பீதி: வீட்டில் தூங்க முடியாமல் மக்கள் தெருக்களில் தஞ்சம்

புதுடெல்லி: டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பீதியடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு 10. 34 மணியளவில் திடீர் நிலநடுக்கம்  ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6. 3 ஆக பதிவாகிள்ளது. தலைநகர் டெல்லி,  உத்தரகாண்ட், ஜம்மு - காஷ்மீர் உட்பட வடமாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

நிலநடுக்கத்தின் மையம் தஜிகிஸ்தானில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிற்கு இருந்தது. இதுெதாடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘நேற்று இரவு 10. 31 மணிக்கு முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர் மூன்று நிமிடங்கள் கழித்து 10:34 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அமிர்தசரஸ் அருகே இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது 6. 1 ரிக்டர் அளவைக் கொண்டிருந்தது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வடமாநிலங்களில் விடியவிடிய நிலநடுக்க பீதி இருந்த நிலையில் இன்று அதிகாலை ராஜஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவில் 4. 3 ஆக அளவிடப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிகானேருக்கு வடமேற்கே 420 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வடமாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் கட்டிடங்கள்  குலுங்கின.

மக்கள் டெல்லி, அமிர்தசரஸில் உள்ள வீடுகளை விட்டு வெளியே வந்து  வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பஞ்சாப்பின் பவன் நகர் பகுதி மக்கள் இந்த நிலநடுக்கம்  மிகவும் வலுவாக இருந்தது என்று மக்கள் கூறினர்.

ஆனால், உயிரிழப்பு அல்லது சொத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

டெல்லி மற்றும் பிற நகரங்களில், இரவில் மக்கள் விடியவிடிய தூங்கவில்லை. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் ஆங்காங்கே தங்கியிருந்தனர்.

பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து  வருகின்றன என்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார். பஞ்சாப்  மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் வெளியிட்ட செய்தியில், மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.

விடியவிடிய வடமாநில மக்கள் சக்திவாய்ந்த நிலநடுக்க பீதியில் இருந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

.

மூலக்கதை