மகாராஷ்டிரா அரசு அனுமதி அளிக்காததால் விமான ‘சீட்’டில் அமர்ந்த ஆளுநர் திடீர் வெளியேற்றம்: கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காததால் பழிவாங்கல்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா அரசு அனுமதி அளிக்காததால் விமான ‘சீட்’டில் அமர்ந்த ஆளுநர் திடீர் வெளியேற்றம்: கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காததால் பழிவாங்கல்?

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று காலை மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசு விமானம் செல்வதற்கு மாநில அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

ஏற்கெனவே, மாநில அரசின் விமானம் ஆளுநரின் பயணத்துக்காக கோரப்பட்டிருந்ததாகவும், விமானத்தில் சென்று ஆளுநர் அமர்ந்த நிலையில், அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை என்று விமானி தெரிவித்ததாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர், தனியாருக்கு சொந்தமான விமானத்தில் டேராடூனுக்கு கோஷ்யாரி புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் மாநில அரசிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

விமானப் பயணத்திற்கான அனுமதி தொடர்பாக மாநில அரசிடம் ஆளுநர் மாளிகையிடம் எட்டு நாட்களுக்கு முன்பு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அரசின் தரப்பில் அனுமதி வழங்கவில்லை.

இருந்தும் ஆளுநர் நேற்று காலை 9. 25 மணிக்கு ராஜ் பவனில் இருந்து புறப்பட்டார். காலை 10 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்தார்.



காலை 10. 30 மணிக்கு விமானம் புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் விமானத்தில் ஏறிய 15 நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் புறப்படவில்லை.

மாநில அரசிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து ஆளுநர் விமான நிலைய அரங்கத்தில் காக்கவைக்கப்பட்டார். இதற்கிடையில், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தனர்.

இருப்பினும், இந்த தொலைபேசி அழைப்புக்கு பிறகும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், தனியார் நிறுவன விமானம் மூலம் ஆளுநர் டேராடூனுக்கு புறப்பட்டு சென்றார்.

இவ்விவகாரம் நேற்றிரவு ஊடக வெளிச்சத்துக்கு வந்தவுடன், பாஜக - ஆளும் சிவசேனா கூட்டணியிடையே அரசியல் குற்றச்சாட்டுகள் தீவிரமாகி உள்ளன.

ஆளுநருக்கு அனுப்பப்படும் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதிப்பதால், அவருக்கு எதிராக மாநில அரசு செயல்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தனக்கு முழு விபரம் தெரியாது என்றும், தெரிந்த பிறகே  கருத்து சொல்ல முடியும் என்றும் துணை முதல்வர் அஜீத் பவார் தெரிவித்தார்.    இதனிடையே, பாஜக மூத்த தலைவர் சுதீர் முங்கன்திவார், ‘ஆளுநரை அவமதித்தற்காக  சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

உள்நோக்கம்  இல்லை என்றால் விமானத்தில் செல்ல அனுமதி வழங்காத அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய  வேண்டும்’ என்றார்.

.

மூலக்கதை