தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

சிட்னி: தெற்கு பசிபிக் கடல் பகுதியில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி தீவுகள் மற்றும் அருகில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தெற்கு பசிபிக் கடலில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5. 50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கேலிடோனியாவுக்கு கிழக்கே 258 மைல் தொலைவில் உள்ள இந்த கடல் பரப்பு 10 கிமீ வரை ஆழம் கொண்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7. 7 டிகிரி பதிவாகியுள்ளதால், அடுத்த 5 மணி நேரத்தில் சுனாமியாக உருவாகும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடல் ஆழத்தில் சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் உருவாகி வருகின்றன. கடலின் ஆழத்திலேயே பயணம் செய்து, இந்த அலைகள் கரையை நோக்கி வரும் போது ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டிருக்கும்.

இதனால் பிஜி தீவுகள், நியூசிலாந்து மற்றும் வானாட்டு பகுதிகளை சுனாமி தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளிலும் சுனாமியின் தாக்கம் ஏற்படலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மையமும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் இருந்து 340 மைல் கிழக்கே உள்ள லார்ட் ஹோவ் தீவுப்பகுதியை சுனாமி தாக்கக் கூடும் என்றும், அப்பகுதி மக்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறும் ஆஸி. அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதே போல் நியூசிலாந்து நாட்டின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனமும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள், பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், ‘தெற்கு பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், ஆக்லாந்து, கிரேட் பாரியர் தீவுகள் உள்ளிட்ட நியூசிலாந்து கடலோர பகுதிகளுக்கு பெருமளவில் சுனாமி அபாயம் உணரப்பட்டுள்ளது. கடலோரப்பகுதிகள் மற்றும் துறைமுகங்கள், ஆறுகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான வேறு இடங்களை நோக்கி செல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள தென் பசிபிக் கடல் பகுதியில், சற்று தொலைவில் கடந்த 2018ம் ஆண்டு ரிக்டர் அளவு கோலில் 7. 5 டிகிரி அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் தாக்குதலில், அருகே உள்ள இந்நாடுகளை சேர்ந்த சுமார் 4,300 பேர் மாயமாகி விட்டனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4. 9 ஆக பதிவானது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4. 01 மணியளவில் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தினால் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உருவான சுனாமியில் இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை