உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 14 சடலம் மீட்பு: சுரங்கப்பாதையில் விடியவிடிய தேடும் பணி தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 14 சடலம் மீட்பு: சுரங்கப்பாதையில் விடியவிடிய தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்தரகாண்டில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சுரங்கப்பாதையில் இருந்து 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 170 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளதாகவும், 15 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமயமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின், சமோலி மாவட்டத்தில் தாலிகங்கா ஆற்று நீரையும், அதன் துணைநதியான அலெக் நந்தா ஆற்று நீரையும் பயன்படுத்தி, ரிஷிகங்கா நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நீர்மின் திட்டத்தில் 300 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று 170க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை 10. 45 மணியளவில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி என்ற பெரிய பனிப்பாறை திடீரென உடைந்து சரிந்தது. இதனால் தாலிகங்கா ஆற்றிலும், அதன் துணை நதியான அலெக்நந்தாவிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்து ஓடியது.

இந்த வெள்ளத்தால் அலெக்நந்தா ஆற்றில் நீர்மட்டம் கிடுகிடுவென பல அடிகள் உயர்ந்து, ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 170 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாததால், பெரும் பீதி நிலவியது. மேலும், அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது.

திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடிசைகளும், வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பாறைகள் உருண்டு ஆங்காங்கே சிதறின.

தாலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாரி, தெஹ்ரி, ருத்ரபிரயாக், அரித்துவார், டேராடூன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை நிலவரபடி தபோவன் பகுதி சாலைகளில் இருந்த 5 பாலங்களை வெள்ளம் அடித்துச்சென்றது. இதனால், 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொட்டலங்களை விநியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. திடீர் வெள்ள பெருக்கு காரணமாக நேற்று நள்ளிரவு வரை 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்று முற்பகல் நிலவரப்படி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
உயிருடன் நேற்று வரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை மொத்தமாக 15 பேர் மீட்கப்பட்டனர்.

இதுவரை 14 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டன. மாயமானவர்கள் பட்டியலில் 170 பேர் உள்ளதாக திபெத் எல்லை பாதுகாப்புபடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணியில் ராணுவம், விமானப்படை, கடற்படை, என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் மீட்பு குழு) உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன. இருந்தும் வெள்ளத்தின் வேகம் குறைந்துள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஐடிபிபி டிஐஜி அபர்ணா குமார் கூறுகையில், ‘70 முதல் 80 மீட்டர் வரை பெரிய சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெறுகிறது.

ஆங்காங்கே தேங்கிய குப்பையால் மீட்பு பணி தாமதமாகிறது. ஜே. சி. பி. யின் உதவியுடன் குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறது.

சுமார் 30-40 ஊழியர்கள் சுரங்கப்பாதையில் தவிக்கின்றனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.

150க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை’ என்றார்.

.

மூலக்கதை