புதுச்சேரி அரசியலில் பரபரப்பு; டெல்லி உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்...மோடி குறித்து புகழாரம்.!!!

தினகரன்  தினகரன்
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு; டெல்லி உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்...மோடி குறித்து புகழாரம்.!!!

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரி ஆளும் காங்கிரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் 26-ம் தேதி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டனர். இதனிடையே அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். நமச்சிவாயத்துடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாயந்தானும் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தப்பின் பேட்டியளித்த நமச்சிவாயம், வளமான புதுச்சேரியை உருவாக்கவே பாஜகவில் இணைந்தேன். உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும் தெரிவித்தார்.காங்கிரசுக்கு மேலும் சிக்கல் இதற்கிடையே ஆளும் காங்கிரசில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் வெளியேறும் சூழல் உள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. புதுச்சேரி சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 33  ஆக இருக்கிறது. தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம், நியமன எம்எல்ஏ சங்கர் மறைவு ஆகிய காரணங்களால், பலம் 31 ஆக குறைந்தது. இதில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ராஜினாமாவால் மொத்த எம்எல்ஏக்களின் பலம் 29 ஆக தற்போது  இருக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ்- 12, திமுக- 3 மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் 16 ஆக இருக்கிறது. இதனால் தற்போதைய சூழலில் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மேலும் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினால் அரசு கவிழும் நிலை ஏற்படும். கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை ஏற்கும் போது, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பதே என்.ஆர் காங்கிரசின் நிலைப்பாடாக இருக்கிறது. ஏற்கனவே பாஜகவின் முதல்வர்  வேட்பாளர் நமச்சிவாயம் முன்மொழியப்படுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், என். ஆர் காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றன.

மூலக்கதை