சென்னைக்கு வலசை வந்த விருந்தாளிகள்: பறவைகள் கணக்கெடுப்பில் அதிகரிக்கும் ஆர்வம்

தினமலர்  தினமலர்
சென்னைக்கு வலசை வந்த விருந்தாளிகள்: பறவைகள் கணக்கெடுப்பில் அதிகரிக்கும் ஆர்வம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த பறவைகள்கணக்கெடுப்பில், பல்வேறு அரிய வகை பறவைகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூமியின் வட கோளத்தில் ஏற்படும் அதிகபட்ச குளிரில் இருந்து தப்பிக்க, ஐரோப்பா, மத்திய ஆசிய, மங்கோலிய நாடுகளில் இருந்து, பறவை இனங்கள், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வலசை வருவது வழக்கம். இவ்வாறு இந்தியா வரும் வலசை பறவைகளில், பெரும்பாலானவை, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வருகின்றன.

பறவைகள் சீசன்

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில், வலசை பறவைகளின் வருகை துவங்கும். இவ்வாறு, வரும் சில வகை பறவைகள், இங்கேயே இனப்பெருக்கமும் செய்கின்றன. வலசை பறவைகளுக்கு, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு வரும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பில் ஈடுபடுவது, பரவலாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் வசதியானோர் மட்டுமே இதில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, மாநகராட்சி பள்ளி, அரசு கல்லுாரி மாணவர்களும் பரவலாக ஈடுபட துவங்கியுள்ளனர். பறவைகள் கணக்கெடுப்பை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அவசியம்

இந்த ஆண்டு, சென்னையில், 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், பல்வேறு அரிய வகை பறவைகளை பதிவு செய்துள்ளனர். இது குறித்து, இந்த அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:பழவேற்காடு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கேளம்பாக்கம் கழுவேலி, வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில், பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.இங்கு வந்த அரிய வகை பறவைகள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பறவைகளின் வகைகள், எண்ணிக்கை, அவற்றின் தன்மை, அந்தந்த இடங்களின் நிலவரம் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.பறவைகள் வரும், பள்ளிக்கரணை போன்ற இடங்களில் மட்டுமல்லாது அதை சார்ந்த நீர் நிலைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.அதே போன்று, பறவைகளை புகைப்படம் எடுக்க வரும் நபர்களும், சூழலியல் தன்மை உணர்ந்து, சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.பறவைகள் கணக்கெடுப்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம், அவை வாழும் பகுதியான நீர் நிலைகளை பாதுகாப்பதில் இருக்க வேண்டியது, தற்போதைய அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

பழவேற்காடு


தமிழகம் -- ஆந்திர எல்லையில், பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. கடலுடன் இணைந்த நிலையில் இப்பகுதி அமைந்துள்ளதால், கடல் சார்ந்த வலசை பறவைகள் இங்கு அதிகமாக வருகின்றன.கருவால் மூக்கன், பெரிய கொசு உள்ளான், கல் திருப்பி உள்ளான், பூ நாரை, யூரேசிய சிப்பி பிடிப்பான், கடற்காக்கை உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட வகை பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

பள்ளிக்கரணை


சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, நகரின் பிரதான பறவைகள் சரணாலயமாக உருவெடுத்து வருகிறது. மிக அதிக பட்ச நகர்ப்புற வளர்ச்சி நெருக்கடிக்கு மத்தியில், இப்பகுதி அமைந்துள்ளது.இங்கு தட்டை வாயன், நாமதலை வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, கருவால் வாத்து உள்ளிட்ட, 182 வகையை சேர்ந்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. இதை ஒட்டி, அமைந்துள்ள, 31 ஏரிகளில் கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் பரவலாக காணப்படுகின்றன.

கேளம்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம்,- முட்டுக்காடு இணையும் இடமாக, இப்பகுதி அமைந்துள்ளது. வனத்துறை கண்காணிப்பில் உள்ள இங்கு, ஏராளமான வலசை பறவைகள் வந்து செல்கின்றன.இங்கு அரிவாள் மூக்கு உள்ளான், யூரேசிய அரிவாள் மூக்கு உள்ளான், பட்டை வால் மூக்கன், பூநாரை, வென் அலகு கடல்புறா உள்ளிட்ட, 160க்கு மேற்பட்ட வகையை சேர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன.

வேடந்தாங்கல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள்சரணாலயம், 300 ஆண்டு பாரம்பரிய சிறப்பு மிக்கது. சுற்றுப்புற ஏரிகளில் இருந்து நீர் வரத்து பாதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு பறவைகள் வருகைகடுமையாக பாதிக்கப்பட்டது.இங்கு கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, வர்ண நாரை, பாம்பு தாரா உள்ளிட்ட, 26க்கு மேற்பட்ட வகையை சேர்ந்த, 12 ஆயிரம் பறவைகள் இங்குகாணப்படுகின்றன.

கரிக்கிலி


செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி, சில கிலோமீட்டர் தொலைவில், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இனப்பெருக்கம் தவிர்த்து, உணவு, ஓய்வுக்காக வரும்பறவைகள் இங்கு தங்கும்.இங்கு, ஊசிவால் வாத்து, புள்ளி மூக்கு வாத்து, கொக்குகள் என சீசன் காலத்தில், 1,500க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
-- நமது நிருபர் --

மூலக்கதை