ஆலஞ்சேரியில் அவ்வையார் உருவாக்கிய சுனை: பல நூற்றாண்டுகளாக வற்றாத அதிசயம்

தினமலர்  தினமலர்
ஆலஞ்சேரியில் அவ்வையார் உருவாக்கிய சுனை: பல நூற்றாண்டுகளாக வற்றாத அதிசயம்

கி.பி., 2ம் நுாற்றாண்டு முதல், 18ம் நுாற்றாண்டு வரை, பல்வேறு கட்டங்களில் வாழ்ந்ததாக கூறப்படும் நான்கு அவ்வையாருக்கு, தமிழகத்தில், சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரியில், அவ்வையாருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, அவ்வை ஏற்படுத்தியதாக கூறப்படும் சுனை, பல நுாற்றாண்டுகளாக, வற்றாத நீர் நிலையாக இருந்து வருகிறது.இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:பல நுாற்றாண்டுகளுக்கு முன், ஆலஞ்சேரிக்கு, ஒரு நாயுடன் வந்த அவ்வையார், பசியுடன் இருப்பதாக கூறியதால், இப்பகுதிவாசிகள், கூழ் கொடுத்துள்ளனர்.கூழை வாங்கிய அவ்வையார், தன் காலால் தரையில் அழுத்தி பள்ளம் ஏற்படுத்தி, முதலில் நாய்க்கு கூழ் ஊற்றி, மீதமுள்ள கூழை குடித்துள்ளார்.அங்குள்ள ஆலமரத்தில் அமர்ந்து, ஆலஞ்சேரி பகுதிவாசிகளை வாழ்த்தி, பாடல் பாடியுள்ளார்.நாய்க்கு கூழ் ஊற்ற பள்ளமிட்ட இடத்தில், நீரூற்று ஏற்பட்டு சுனையாக மாறியதாக கூறுகின்றனர்.

அன்று முதல், எந்த காலத்திலும் வற்றாத சுனையாக இருக்கிறது. அருகில் உள்ள ஏரி வறண்டாலும், சுனை வற்றுவதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சித்திரையில் விழா

ஆலஞ்சேரி கிராமத்திற்கு, சித்திரை மாதத்தில் அவ்வையார் வந்ததால், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், அவ்வையார் கோவிலில், சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது.முதல் நாள், கொடியேற்று விழாவில், பச்சை நிறத்தில் கொடியேற்றப்படும். இரண்டாம் நாள், அவ்வையார் சிலைக்கு அபிஷேகம்; மூன்றாம் நாள் விழாவில், காலையில், 40 கிலோ எடையுள்ள வெண்கல சிலை அவ்வையார் வீதியுலா நடைபெறுகிறது.வீதியுலா முடிந்ததும், அவ்வையாருக்கு கூழ் ஊற்றுவதற்கு முன், நாய்க்கு கூழ் ஊற்றுவது வழக்கமாக உள்ளது.

மூலக்கதை