கோவை மீது அக்கறை! அ.தி.மு.க.,வுக்கா... தி.மு.க.,வுக்கா...

தினமலர்  தினமலர்
கோவை மீது அக்கறை! அ.தி.மு.க.,வுக்கா... தி.மு.க.,வுக்கா...

பேரூர் : சிறுவாணி அணையை நிரம்ப விடாமல், கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதால், தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்கும் கட்சி எதுவாக இருந்தாலும், 'சாடியாறு - நண்டங்கரைஅணை திட்டத்தை செயல்படுத்த, முன்வர வேண்டுமென, கோரிக்கை வலுத்து வருகிறது.

கோவையில்மக்கள் தொகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதால், கோடை காலங்களில் தண்ணீர் பிரச்னைஅதிகரிக்கிறது. சில ஆண்டுகளாக கேரள அரசு, கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணியில், சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, பருவமழைகளின் போது, அணையின் முழு கொள்ளளவை அடையவிடாமல் செய்து வருகிறது. கேட்டால், 'அணை, 50 ஆண்டுகளை கடந்து விட்டதால், முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கினால் பாதிப்பு' என, காரணம் கூறுகிறது.
இதனால், தொண்டாமுத்துார் வட்டார விவசாயிகளால், 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, 'சாடியாறு - நண்டங்கரை' அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தற்போது, தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கையில், 'சாடியாறு - நண்டங்கரை அணை திட்டத்தை செயல்படுத்த உறுதியளிக்க வேண்டும்' என, அணை திட்டக்குழு அமைப்பாளர் அர்ச்சுனன் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, அர்ச்சுனன் கூறியதாவது: சிறுவாணி அணை நீருக்கு, கேரளா நெருக்கடி அளித்து வருவதால், மாற்று ஏற்பாடுகளில், கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். சாடியாறு - நண்டங்கரை அணைத்திட்டத்தை செயல்படுத்தி, பிரச்னைக்கு தீர்வு காணலாம்.சாடிவயல் பகுதியில், அணை கட்டும் அனைத்து வாய்ப்பும் உள்ளது. சுமார், 1,000 ஏக்கரில் தண்ணீர் தேக்க முடியும். கோவை வரை, 30 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். வறட்சியில் தேங்கிய நீரை திறப்பதினால், விவசாயிகள் பயனடைவர்.இது சம்பந்தமான விரிவான அறிக்கை, 2003ல் அப்போதைய மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தன.

அணையில் போட்ட கல்லாக, அதன் பின், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, சிறுவாணி அணை விஷயத்தில், கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அடுத்ததாக எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், சாடியாறு - நண்டங்கரை அணை திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். கோவை மக்களின் நலனிலும், நகரின் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதாக, அரசியல் கட்சியினர் ஆளாளுக்கு மைக்கில் முழங்குகின்றனர்.
உண்மையிலேயே, அக்கறை இருக்கும் கட்சியினர், தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்தவுடன், திட்டத்தை நிறைவேற்றுவதாக, தங்கள் தேர்தல் அறிக்கையில், உறுதி அளிக்க வேண்டும்.

மூலக்கதை