டெல்லி விவசாயிகள் பேரணியில் விதிமீறல்..! 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்

தினகரன்  தினகரன்
டெல்லி விவசாயிகள் பேரணியில் விதிமீறல்..! 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்

டெல்லி: டெல்லியில் போராட்ட பாதை ஒப்பந்த மீறலில் ஈடுபட்டதற்காக சன்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தலைவருக்கு விளக்கம் கேட்டு டெல்லி துணை காவல் ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு கூறின. எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர். இதன்பின் டெல்லி போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர். கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது. இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காக உங்கள் மீதும் மற்றும் உங்களுடைய கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டு அதற்கு அடுத்த 3 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

மூலக்கதை