மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தம்!: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்...மத்திய அரசு தகவல்..!!

தினகரன்  தினகரன்
மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தம்!: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்...மத்திய அரசு தகவல்..!!

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு உலக தரத்திலான சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் 750 படுக்கைகள், 100 மருத்துவ படிப்புகளுடன் கூடியதாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து மதுரை தோப்பூரில் 224 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய 45 மாதங்களில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பலஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன் பெற்றிருப்பார்கள். ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. மருத்துவமனை கட்டுமான பணிக்கு கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதியாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி ஆவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த மருத்துவமனையை தற்போது 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது. 2 மாதங்களில் அதாவது, மார்ச் மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் உடனே தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை