தேக்கம்! ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காலி பணியிடங்கள் ... அதிகாரிகள் பற்றாக்குறையால் பணிகள்

தினமலர்  தினமலர்
தேக்கம்! ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காலி பணியிடங்கள் ... அதிகாரிகள் பற்றாக்குறையால் பணிகள்

மதுரை : மதுரையில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆர்.டி.ஓ., மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தேங்குகின்றன.

மதுரை வடக்கில் ஆர்.டி.ஓ., மற்றும் 5 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டும் உள்ளார். அவரும் விடுப்பில் உள்ளதால் வாடிப்பட்டி ஆய்வாளர் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் மூன்று ஆய்வாளர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. மத்தியில் இரண்டு ஆண்டுகளாக ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக உள்ளது. தற்போது ஆய்வாளர்களும் இல்லை. அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் பிரபு இங்கு கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இதனால் பழகுனர், ஓட்டுநர் உரிமம், புதிய வாகன பதிவு, புதுப்பித்தல், பயிற்சி பள்ளிகளில் ஆய்வுஎன பல்வேறு பணிகள் தேங்கியுள்ளன.

குறிப்பாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு பயிற்சி காலம் முடித்தவர்களுக்கு உரிய நேரத்தில் பரிசோதனை (டெஸ்ட்) நடக்காததால் நிர்வாக பிரச்னைகள் எழுகின்றன.

அதிகாரிகள் தயக்கம் மதுரை தெற்கில் 35, வடக்கில் 44, மத்தியில் 17 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதுதவிர நேரடி டெஸ்ட், புதுப்பித்தல், விபத்து ஆய்வு என பல பணிகளை ஒரே நேரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செய்ய வேண்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு ஆய்வாளர் 25 'டெஸ்ட்' மட்டுமே அனுமதிக்க இலக்கு உள்ளதாலும் பணிகள் தேங்குகின்றன.

அரசு நிகழ்ச்சிகளுக்கான செலவை உயர் அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தலையிலேயே கட்டுவதாலும், விஜிலென்ஸ் ரெய்டுகளாலும் மதுரைக்கு வர அதிகாரிகள் தங்குவதால் இப்பணியிடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கும் நிலையில் இப்பிரச்னைக்கும் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


மூலக்கதை