அவலம்: இறந்தவர் உடலை சுமந்து ஆற்றை கடந்து செல்லும்...பாலம் இல்லாததால் திம்மாபுரம் பகுதி மக்கள் அவதி

தினமலர்  தினமலர்
அவலம்: இறந்தவர் உடலை சுமந்து ஆற்றை கடந்து செல்லும்...பாலம் இல்லாததால் திம்மாபுரம் பகுதி மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி; திம்மாபுரம் கிராம காலனியில் மயானத்திற்கு கொண்டு செல்ல முறையான பாதை இல்லாததால், இறந்தவர்கள் உடலை சுமத்து ஆற்று நீரில் இறங்கி செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராம காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 1500க்கும் மேற்பட்டவர்கள் உள்ள இக்கிராம காலனியில் மயானத்திற்கு செல்வதற்கான பாதையின் நடுவே உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் பரிதவித்து வருகின்றனர். 500 மீ., தொலைவில் உள்ள மயானத்தின் குறுக்கே மயூரா நதி ஓடுகிறது. இந்த நதியினை கடந்துதான் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது.பல ஆண்டுகளாகவே பாலம் கட்டப்படாததால், ஆற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்து செல்ல வேண்டிய அவல நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளப்படாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டிவருகின்றது. அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது, பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் இருந்துவந்த மக்கள், தற்போது பெய்துள்ள தொடர் மழை காரணமாக ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடும் நிலையில் இறந்தவர்களின் உடலை ஆற்றுத்தண்ணீரில் இறங்கி தோளிலும், ஆழம் அதிகள் உள்ள இடங்களில் தலையில் சுமந்தும், செல்கின்றனர்.ஆற்றினை கடக்க முடியாத பலரும் இறுதிச்சடங்கில் பங்கு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். தவிர்க்க முடியாத காரணங்களால், இறந்தவர்களையும், அவர்களின் உறவினர்களையும், தண்ணீரில் இறங்கி, அக்கரைக்கு கொண்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை அரங்கேறி வருகிறது.எனவே இக்கிராம மக்களின் துயரத்தை போக்கிடும் வகையில், ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அல்லது தரைப்பாலம் கட்டித்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை