டெல்டாவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு 2ம் கட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை

தினமலர்  தினமலர்
டெல்டாவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு 2ம் கட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் டெல்டா விவசாயிகளுக்கு மழையால் பாதித்த பயிர்களுக்கு விரைவில் இரண்டாம் கட்டமாக நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். 'புரெவி' புயல் காரணமாக பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.முதல்வர் பழனிசாமி, உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் பயிர் பாதிப்பு 70 சதவீதம் என வருவாய்த்துறை கணக்கீடு செய்தது.அதன்படி அரசு, எக்டேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்த நிலையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து, 17 ஆயிரம் நிவாரண விண்ணப்பங்கள் வருவாய்த்துறை மூலம் பெறப்பட்டன. இதில் ஒரு சில விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் விவசாய நிலங்கள் இருந்தால் தனித்தனி விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.இதனை வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மறு ஆய்வு செய்து, ஒவ்வொரு விண்ணப்பதாரரின் மொத்த நிலப்பரப்பில் 70 முதல் 75 சதவீத அளவில் அரசு நிவாரணத் தொகையை கடந்த 11ம் தேதி விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டன.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ஜனவரி முதல் வாரத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மீண்டும் பெரும் பாதிப்பைஏற்படுத்தியது.பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அரசுக்கு பாதிப்பு குறித்து பரிந்துரை செய்தார்.அதன் பேரில் விவசாயிகளுக்கு, ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழை காரணமாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் விவசாயிகளுக்கு 100 சதவீத அளவில் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது.

அதனால், வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் முன்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய சாகுபடியின் பரப்பளவு, வழங்கப்பட வேண்டிய பரப்பளவு, எத்தனை விவசாயிகள் போன்றவை குறித்து கணக்கெடுப்பு நடத்தி வழங்கப்பட உள்ளது.இந்தப் பணிகள் வருவாய்த்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இன்னும் ஒரு வார காலத்தில் மீண்டும் நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை