வடசென்னையில் புது சுற்றுலாதலம் அமைப்பு

தினமலர்  தினமலர்
வடசென்னையில் புது சுற்றுலாதலம் அமைப்பு

சென்னை; இடநெருக்கடி, சுற்றுச்சூழல் மாசு என, பசுமை பரப்பு குறைவாக உள்ள வடசென்னையில், 18 ஆண்டுகளாக பயன்பாடற்று கிடந்த இடத்தில், 5 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்கா அமைத்து, புதிய சுற்றுலா தலத்தை, தோட்டக்கலை துறையினர் உருவாக்கி உள்ளனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில், 1920ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான பணிமனை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கிலாந்து நாட்டில் இருந்து, கப்பலில் கொண்டு வரப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், இங்கு வைக்கப்பட்டு, பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.நாளடைவில், நவீன இயந்திரங்கள் உற்பத்தி துவங்கின. இதையடுத்து, பழைய இயந்திரங்களின் தேவை படிப்படியாக குறைந்தது. எனவே, வேளாண் பொறியியல் பணிமனை, 18 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.அதன்பின், மரங்கள்வளர்ந்து, புதர்கள் மண்டி, சிறிய காடு போல இந்த இடம் மாறியது. சமூக விரோத செயல்கள் அரங்கேறின. இந்த இடத்தை மீட்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைப்பதற்கு, தோட்டக்கலைத்துறை முடிவு செய்தது. இதற்கு, 5 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.பூங்கா அமைக்கும் பணிகள், கடந்தாண்டு ஜனவரியில் துவங்கின. இங்குள்ள, 5 ஏக்கர் நிலத்தில், 3.8 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டது. வேளாண் பணிமனையில் உள்ள இயந்திரங்களை, பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில், உள் அலங்கார தோட்டமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட பழைய இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஆடியோ' அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, 6,000 சதுர அடியில், புல்வெளி, கண் கவரும் பூச்செடிகள், அழகிய இலைகள் உடைய, 1,000 மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன.

வடசென்னையின் புதிய சுற்றுலாத் தலமாக இது உருவாகியுள்ளது.இந்த பூங்காவை சுற்றி பார்ப்பதற்கு, பெரியவர்களுக்கு, 20 ரூபாயும்; சிறியவர்களுக்கு, 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவசர கதியில் பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், இதை மேலும் பொலிவுபடுத்தும் வகையில், பல்வேறு பணிகளில், தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். வரும் நாட்களில் இங்கு சுற்றுலா பயணியர் வசதிக்காக, மேலும் பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இங்கு, சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுப்பதற்கு, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த பூங்காவை முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட துவங்கியுள்ளனர்.

மூலக்கதை