மருத்துவமனையில் கங்குலி | ஜனவரி 27, 2021

தினமலர்  தினமலர்
மருத்துவமனையில் கங்குலி | ஜனவரி 27, 2021

கோல்கட்டா: கங்குலிக்கு மீண்டும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கோல்கட்டா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 48. கடந்த 2003 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். கடந்த 2019 முதல் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக உள்ளார். கடந்த ஜன. 2ல் கோல்கட்டா வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட, இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது தெரிந்தது.

90 சதவீதம் பாதிப்பு இருந்த ஒரு அடைப்பு மட்டும் ‘ஆன்ஜியோபிளாஸ்டி’ சிகிச்சையில் சரி செய்யப்பட்டது. இவருக்கு உடனடியாக ‘ஆப்பரேஷன்’ தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட, வீடு திரும்பினார். மீதமுள்ள அடைப்புகளை சரிசெய்ய ‘ஸ்பெஷலிஸ்ட்’ மருத்துவர்களிடம் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டது.

தவிர கங்குலியை வீட்டில் இருந்தபடி கண்காணிக்க 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதனிடையே நேற்று  இரவு கங்குலி, வழக்கத்துக்கு மாறாக சற்று சிரமமாக இருப்பது போல உணர்ந்துள்ளார். இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக கோல்கட்டா மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டார். ஆனால் இது வழக்கமாக ‘செக் அப்’ தான், மற்றபடி எதுவும் கவலைப்படத் தேவையில்லை என கங்குலி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மூலக்கதை