தென் ஆப்ரிக்க பவுலர்கள் ஏமாற்றம்:முன்னிலை பெற்றது பாக்., | ஜனவரி 27, 2021

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்க பவுலர்கள் ஏமாற்றம்:முன்னிலை பெற்றது பாக்., | ஜனவரி 27, 2021

கராச்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பவாத் ஆலம் சதம் கடந்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கராச்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 220 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (5), பவாத் ஆலம் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணியின் அசார் அலி அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது கேஷவ் மஹாராஜ் ‘சுழலில்’ அசார் அலி (51) சிக்கினார். முகமது ரிஸ்வான் (33) நிலைக்கவில்லை. பின் இணைந்த பவாத் ஆலம், பஹீம் அஷ்ரப் ஜோடி தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அபாரமாக ஆடிய ஆலம், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அஷ்ரப், அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது லுங்கிடி ‘வேகத்தில்’ பவாத் ஆலம் (109) வெளியேறினார். நார்ட்ஜே பந்தில் அஷ்ரப் (64) அவுட்டானார்.

 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, 88 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஹசன் அலி (11), நவுமன் அலி (6) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, நார்ட்ஜே, லுங்கிடி, மஹாராஜ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை