அஷ்வின், நடராஜன், சுந்தருக்கு விருது: ஐ.சி.சி., பரிந்துரை | ஜனவரி 27, 2021

தினமலர்  தினமலர்
அஷ்வின், நடராஜன், சுந்தருக்கு விருது: ஐ.சி.சி., பரிந்துரை | ஜனவரி 27, 2021

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு தமிழகத்தின் அஷ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். இனி, இவ்விருதுகளை மாதந்தோறும் வழங்க ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக ‘ஆன்லைன்’ முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் முன்னாள் வீரர்கள், போட்டி ஒளிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் ரசிகர்களும் இணைந்து சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் நட்சத்திரங்களின் விபரம், ஒவ்வொரு மாதத்தின் 2வது திங்கட் கிழமை ஐ.சி.சி., அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியா சார்பில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், ‘சுழல்’ வீரர் அஷ்வின், ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் ரிஷாப் பன்ட், முகமது சிராஜ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பை வெல்ல உதவினர்.

இவர்களை தவிர, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ், தென் ஆப்ரிக்க வீராங்கனைகளான மரிசேன் காப், நாடின் டி கிளார்க், பாகிஸ்தான் வீராங்கனை நிடா தார் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை