நூல் விலை குறைக்கப்படுமா? நூல் விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் .... நூற்பாலை சங்கங்களுக்கு கடிதம்

தினமலர்  தினமலர்
நூல் விலை குறைக்கப்படுமா? நூல் விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் .... நூற்பாலை சங்கங்களுக்கு கடிதம்

திருப்பூர் : ''வரும் பிப்., 1ல், கிலோவுக்கு 30 ரூபாய் வரை, நுால் விலையை குறைக்க வேண்டும்'' என, திருப்பூரில் புதிதாக உருவாகியுள்ள ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்து நுாற்பாலை சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள, ஆடை ஏற்றுமதியாளர் 200 பேர் இணைந்து உருவாக்கியுள்ள 'திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு', நுால் விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டிவருகிறது.முதல்கட்டமாக நுால் விலையை கட்டுப்படுத்த கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தலைவர் அப்புகுட்டி; கோவை 'சைமா' தலைவர் அஸ்வின் சந்திரன், இந்திய ஜவுளி தொழில் சம்மேளன (சிட்டி) தலைவர் ராஜ்குமார், வட இந்திய நுாற்பாலை சங்க தலைவர் சஞ்சய் கார்க் ஆகியோருக்கு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு பிரதிநிதி ஆர்.சக்திவேல் கூறியதாவது:நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆடை விலையை உயர்த்தி வழங்க, வெளிநாட்டு வர்த்தகர்கள் மறுக்கின்றனர்.இதனால், ஆர்டர்கள் கைநழுவுகின்றன. ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கும், ஆடை தயாரிக்க முடியாமல், திருப்பூரில் உள்ள, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திணறுகின்றன.வரும் பிப்., 1ம் தேதி, ஒசைரி நுால் விலையை கிலோவுக்கு 30 ரூபாய் வரை குறைக்கவேண்டும்; கடந்த டிச., மாத நுால் விலையை தொடரச்செய்யவேண்டும்.
\ஆடை உற்பத்தி ஆர்டர்களை கைப்பற்றினால்தான், உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி பெறமுடியும்.நுால் விலையை குறைக்க கோரி, அனைத்து நுாற்பாலை சங்கங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்; நியாயமான இந்த கோரிக்கையை, நுாற்பாலைகள் பரிசீலிக்கவேண்டும்; நுால் விலையை குறைத்து, அறிவிக்க வேண்டும். பல ஆடை உற்பத்தி நிறுவனங்கள், குஜராத் போன்ற வெளிமாநில நுாற்பாலை களிடம், நுால் கொள்முதல் செய்கின்றன; அதனால், அம்மாநில நுாற்பாலை சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நுால் விலை குறைக்கப்படாததால், ஆடை உற்பத்தி முழுமையாக முடங்கும் அபாய நிலை ஏற்படும்.
நுால் விலையை கட்டுப்படுத்துவதற்காக, ஏற்றுமதியாளர் 200 பேர் இணைந்து, தற்காலிகமாகவே இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால், நாங்கள் சார்ந்துள்ள ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.



மூலக்கதை