அரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தினகரன்  தினகரன்
அரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பெங்களூரு: அரசுக்கு சொந்தமான நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோரை லோக் ஆயுக்தா கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடக மாநில முதல்வராக கடந்த 2008 முதல் 2011-ம் ஆண்டு வரை பி.எஸ்.எடியூரப்பா இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக முருகேஷ் நிராணி இருந்தார். அப்ேபாது பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளியில் குடியிருப்பு அமைப்பதற்காக அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் 26 ஏக்கர் நிலம் தொழிற்சாலைக்காக டிநோடிபிகேஷன் செய்துள்ளதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாக தொழிலதிபர் ஆலம்பாஷா என்பவர் கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தார். அதையேற்றுக்கொண்ட லோக்ஆயுக்தா இருவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்தது. லோக்ஆயுக்தாவில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரணை நடத்திய நீதிபதி ஜான்மைக்கில் டிகுன்ஹா முன் விசாரணை நடந்தது. மனுதாரர் மற்றும் லோக்ஆயுக்தா சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்தனர். அதை தொடர்ந்து, இருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, இம்முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி லோக்ஆயுக்தாவுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதல்வர் மற்றும் முருகேஷ் நிராணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வாதி மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்தனர். அதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அரசு நிலம் டிநோடிபிகேஷன் புகாரில் மனுதாரர்களை கைது செய்யாமல் இருக்க இடைக்கால தடை உத்தரவு லோக்ஆயுக்தாவுக்கு பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

மூலக்கதை