விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை 6 டிடிசி பேருந்துகள், 5 போலீஸ் வாகனங்கள் சேதம்: முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை 6 டிடிசி பேருந்துகள், 5 போலீஸ் வாகனங்கள் சேதம்: முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையி–்ல், ஆறு டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் 5 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரி–்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினமான நேற்று முன்தினம், புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீசி போலீசார் அதிரடியில்இறங்க, பதிலுக்கு தெறித்து ஓடிய போராட்டக்காரர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டு மதம் சார்ந்த கொடியை ஏற்றினர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஏறக்குறைய 600 டிராக்டர்களில் 10,000 க்கும்  மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் பல காவலர்கள்  காயமடைந்தனர். 70 இரும்பு தடுப்புகள் சேதமடைந்தன.வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஐபி எஸ்டேட் காவல்  நிலையத்தின் அதிகார எல்லைக்குள் டிராக்டர் பேரணிணை நடத்த அனுமதி  வழங்கவில்லை என்றாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் திலக் பாலத்திலிருந்து  லுட்டியன்ஸ் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அப்போது, விவசாயிகள் தடுப்புகளை அடித்து  நொறுக்கி, ஐ.டி.ஓவில் நிறுத்தப்பட்டிருந்த டி.டி.சி பேருந்துகளை டிராக்டர்களை கொண்டு இடித்து தாக்கினர்.அதோடு, போலீசார் மீது டிராக்டர்களை ஏற்றும் முனைப்பில் வேகமாக ஓட்டிவந்து விரட்டினர். எனினும், ஆவசேமாக இருந்த விவசாயிகளை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.ஆனாலும், அவர்கள் லுட்டியன்ஸ் பகுதிக்குள் நுழைவதில்  பிடிவாதம்காட்டினர்.இந்த களேபரத்தில் அவர்கள் வாகனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் உபகரணங்களையும்  சேதப்படுத்தினர். இதனால், போராட்டக்காரர்களை அந்த  இடத்திலிருந்து கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப்  பயன்படுத்தினர். மேலும், ஐ.டி.ஓ.வின் ராம் சரண் அகர்வால் சவுக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மதியம் 12 மணியளவில் சாராய் காலே  கானில் இருந்து எம்.ஜி.எம். மார்க் நோக்கி, 500 முதல் 600 டிராக்டர்கள்  9,000 முதல் 10,000 போராட்டக்காரர்களுடன் ஐ.டி.ஓ பகுதிக்குள் நுழைந்தன. மேலும், ராம் சரண் சவுக்கிலிருந்து டி.டி.யு மார்க் பகுதிக்குச்  செல்லும் ஒரு டிராக்டர், ஆந்திர பப்ளிக் பள்ளிக்கு அருகில்  வைக்கப்பட்டிருந்த ஒரு தடுப்பை இடித்து முன்னேற முயன்று பின்னர் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. அப்போது, டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை காவல்துறையினரும் மற்றவர்களும் மீட்க முயன்றபோது, ​​டிராக்டர்களில் இருந்த மற்ற  எதிர்ப்பாளர்கள் அங்கு வந்து காவல்துறையினர் மீது ஏற்ற முற்பட்டனர். அதன்பின் நிலைமையை உணர்ந்த சிலர் ஆபத்தில் சிக்கிய டிரைவரை மீட்டு ஐடிஓ சவுக்கிற்கு அழைத்துக்கெராண்ட அங்கிருந்து வெளியேறினர். ஆனால், அந்த டிராக்டர் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உத்தரப்பிரதேச ராம்பூர் மாவட்டத்தில்  வசிக்கும் நவ்னீத் சிங் என அடையாளம் காணப்பட்டது. இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர். செங்கோட்டையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஆய்வுசெங்கோட்டையில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல்  நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ​​செங்கோட்டையின் வளாகத்தில் சேதப்படுத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர் கேட், டிக்கெட் கவுண்டர் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் ஆகியவை சேதமாகியிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வின்போது அமைச்சருடன் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் உடன் சென்று இருந்தனர். இதுபற்றி பேசிய அமைச்சர், ‘‘இந்த விவகாரத்தில் நான் தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் அறிக்கையை கேட்டுள்ளேன். அது வரட்டும் ”என்றார். வன்முறை தொடர்பாக 22 எப்ஐஆர் பதிவு தேசிய தலைநகரில் விவசாயிகள்  டிராக்டர் அணிவகுப்பின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை  இதுவரை 22 எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது.இந்த சம்பவத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீசார்  காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகளை  அடையாளம் காண வீடியோக்கள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) கீழ் டெல்லியில் 173 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் யுனெஸ்கோவால்  உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட ஹுமாயூன் கல்லறை, குதுப் மினார் ஆகியவற்றின் வரிசையில் செங்கோட்டையும் இடம்பெற்றுள்ளது

மூலக்கதை