மாநில பட்ஜெட்டில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி குறைக்க முதல்வர் முடிவு

தினகரன்  தினகரன்
மாநில பட்ஜெட்டில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி குறைக்க முதல்வர் முடிவு

பெங்களூரு: மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எம்எல்ஏக்கள் தொகுதி வளர்ச்சி நிதியை குறைக்க முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. நிதியமைச்சர் பொறுப்பை கூடுதலாக வகித்து வரும் முதல்வர் எடியூரப்பா  2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணியை கடந்த 1ம் தேதி தொடங்கியுள்ளார். பட்ஜெட்டில் என்னனென்ன திட்டங்கள் சேர்ப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து இரண்டு நாட்கள் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த வாரம் துறை வாரியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.இதனிடையில் வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் தொகுதி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவிப்பார் என்ற கனவில் எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் மாநில அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதால், தொகுதி வளர்ச்சி நிதியை குறைக்க முதல்வர் யோசித்து வருவதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக முதல்வரை சந்தித்து பேசும் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். நடப்பு 2020-21ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 2.37 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று மற்றும் வடகர்நாடக பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக கடந்த 10 மாதங்களில்  மாநில அரசு சக்தியை மீறி செலவு செய்துள்ளதுடன் அரசுக்கு பல வழிகளில் கிடைக்க வேண்டிய வரி வருவாய் குறைந்ததால், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக பகுதி எம்எல்ஏக்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது தவிர முதல் முறையாக எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றுள்ள 25 பேர், தங்கள் தொகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அரசு கருவூலத்தில் நிதியில்லாமல் எப்படி கூடுதல் நிதி ஒதுக்கீடு என்ற கவலையில் உள்ள முதல்வர், அடுத்த வாரம் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களை அழைத்து பேசி சமாதானம் செய்யும் முயற்சிமேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இம்முறை அதிகம் எதிர்பார்ப்புடன் கூடிய பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்பதை அவர்களிடம் எடுத்து கூறி சமாதானம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.நடப்பு நிதியாண்டில் வரி பங்கு ரூ.28,591 கோடி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.16,192 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசின் மூலம் ஜிஎஸ்டி பங்கு ரூ.16,112 கோடி வழங்க வேண்டியதில் ரூ.9.042 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வருவாய் ரூ.1,80,217 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், நிதியாண்டு முடிவில் ரூ.1.14 லட்சம் கோடி மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பங்கில் ரூ.11,215 கோடி குறைந்துள்ளது. இந்நிலையில் சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆட்சி காலத்தில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்த அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இவ்வளவு நிதி நெருக்கடி மத்தியில் தான் வரும் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் பணியில் எடியூரப்பா தொடங்கியுள்ளார். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பங்கில் ரூ.11,215 கோடி குறைந்துள்ளது.

மூலக்கதை