தங்கவயலில் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை கிளைக்கு அடிக்கல்

தினகரன்  தினகரன்
தங்கவயலில் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை கிளைக்கு அடிக்கல்

தங்கவயல்: தங்கவயலில் பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையின் கிளை அமைப்பதற்காக கத்தோலிக்க கிறிஸ்துவ பேராயர் பீட்டர் மச்சாடோ அடிக்கல் நாட்டினார். தங்கவயலில் தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்காக அனைத்து மருத்துவ வசதிகளோடு செயல்பட்டு வந்தது பிஜிஎம்எல் மருத்துவமனை. தங்க சுரங்கம் மூடப்பட்டதால், சுரங்க மருத்துவமனையும் மூடப்பட்டு விட்டது. ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும் போதிய மருத்துவ வசதிகள் இன்றி இருப்பதால் தங்கவயல் மக்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை வசதி இன்றி அவதிப்படுகின்றனர். எனவே பெங்களூரு மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையின் கிளையை தங்கவயலில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கவயல் வந்த பெங்களூரு மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ மருத்துவமனையின் கிளை அமைப்பதற்காக சூசை பாளையம் பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு‌ விட்ட புனித சூசையப்பர் தமிழ் வழி ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளியில் சுகாதார மையம் அமைக்க பார்வையிட்டு  இடம் தேர்வு செய்து சென்றார்.இந்த நிலையில் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையின் கிளை சுகாதார மையம் அமைப்பதற்காக பேராயர் பீட்டர் மச்சாடோ அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தங்கவயல் முதன்மை குரு சூசை ராஜ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை செபாஸ்டியன், மற்றும் கிறிஸ்துவ பாதிரியார்கள், பகுதி கவுன்சிலர் ஜெர்மன் ஜூலியஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை