டெல்லி அரசு, அமெரிக்க தூதரகம் இணைந்து 700 மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி

தினகரன்  தினகரன்
டெல்லி அரசு, அமெரிக்க தூதரகம் இணைந்து 700 மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி

புதுடெல்லிடெல்லி அரசு மற்றும் அமெரிக்க தூதரகம் இணைந்து 700 மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நேற்று தொடங்கியது. டெல்லியில் உள்ள அனைத்து பெண்கள் கல்லூரியில் இருந்தும் ஆசிரியர் பணியை விரும்பும் 700 மாணவிகளை  தேர்வு செய்து அவர்களுக்கு 10 வாரம் ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசும், அமெரிக்க தூதரகமும் இணைந்து தொடங்கி உள்ளன. இந்த திட்டத்தை துணை முதல்வர் சிசோடியா, அமெரிக்க தூதரகத்தில் பொதுவிவகாரத்துறை அதிகாரி டேவிட் எச் கென்னடி ஆகியோர் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமெரிக்க தூதரகத்தில் உள்ள மண்டல ஆங்கில மொழி அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் சிசோடியா பேசியதாவது: நாங்கள் இந்த திட்டம் மூலம் எதிர்கால ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். தரமான பயிற்சியை அவர்கள் முன்கூட்டியே பெறுவதன் மூலம் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அவர்கள் கற்றுத்தருவார்கள். ஆங்கிலம் உலக அளவில் இணைப்பு மொழியாக உள்ளது. இது நமது ஆசிரியர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்களால்தான் நமது குழந்தைகள் நல்ல ஆங்கில அறிவை பெற முடியும். டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை அமெரிக்காவின் முதல் குடிமகள் ஜில் பிடென் பார்வையிட வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டு, இங்கு படிக்கும் குழந்தைகளுடன் அவர் உரையாட விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். அமெரிக்க அதிகாரி டேவிட் எச் கென்னடி பேசியதாவது: பொருளாதார முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் ஆங்கில அறிவு மிகவும் முக்கியமானது. அதற்காக டெல்லி அரசும், அமெரிக்க தூதரகமும் இணைந்து செயல்படுவதை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட காலமாகவே டெல்லி அரசும், அமெரிக்க தூதரகமும் பல விஷயங்களில் இணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக துணை முதல்வர் சிசோடியா ஆசிரியர்கள் நல்ல ஆங்கில அறிவு பெறுவதற்காக இதுபோன்ற 10வார ஆங்கில பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஆங்கில பயிற்சி தேசிய கல்வி கொள்ளை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 21வது நூற்றாண்டை நோக்கிய பார்வையில் ஆசிரியர்களின் தரத்தை இந்த பயிற்சி உயர்த்தும். இதன் மூலம் நவீன வகுப்பறைகளை ஆசிரியர்கள் எளிதாக பயன்படுத்த முடியும். மற்ற ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுக்க முடியும். பட்டதாரிகள் இந்த பயிற்சியை பெறும்ேபாது 10 ஆயிரம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை