டிராக்டர் பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் : வீடியோ வெளியிட்டது டெல்லி காவல்துறை

தினகரன்  தினகரன்
டிராக்டர் பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் : வீடியோ வெளியிட்டது டெல்லி காவல்துறை

டெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 83 போலீசார் காயம் அடைந்ததாக கூறி வீடியோ ஒன்றை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. சிங்கு எல்லை மற்றும் காஜிப்பூர் எல்லையில் திரண்டு இருந்த விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி ட்ராக்டர்களை இயக்கிச் சென்றனர். அங்கிருந்த போலீஸ் தடுப்புகளை மீறிச் சென்றவர்கள் செங்கோட்டையில் ஏறி கொடிகளை நட்டனர். கொடிகளை நட்டபோது, அங்கிருந்த போலீஸ் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தியதாக டெல்லி காவல்துறை வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் காவலர்கள் பலர் சுவர்களை ஏறி குதித்து தப்பிக்கும் காட்சிகள் உள்ளது. இதனால் போலீசார் பலர் காயம் அடைந்தனர். போலீஸ் தடுப்புகளை டிராக்டர்கள் விட்டு உடைத்து கொண்டு சென்ற விவசாயிகள் காவலர்கள் மீதும் டிராக்டர்கள் ஏற்றி செல்ல முயன்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல் இணை ஆணையர் அலோக் குமார் கூறுகையில், \'பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது டிராக்டரை ஏற்றி செல்ல விவசாயிகள் முயன்றனர்.போலீஸ் தடுப்புகளை உடைத்தனர்.பேருந்துகளை அடித்து சேதப்படுத்தினர்.மிகப்பெரிய வன்முறை நடைபெற்றது. இதனால் போலீஸ் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் வெடித்தது,\'என்றார்.டிராக்டர் பேரணி முடிந்து விவசாயிகள் கலைந்து சென்ற பிறகு போலீசார் சோதனை நடத்தினர். வருமானவரித்துறை அலுவலகம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் முக்கிய போக்குவரத்திற்கான மெட்ரோ ரயில் சேவையும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை இணைய சேவை முடக்கப்பட்டது. இதனிடையே நேற்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் 22 முதற்கட்ட தகவல் அறிக்கை டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை