கோஹ்லி தான் கேப்டன்: சொல்கிறார் ரகானே | ஜனவரி 26, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி தான் கேப்டன்: சொல்கிறார் ரகானே | ஜனவரி 26, 2021

புதுடில்லி: ‛‛கோஹ்லி தான் கேப்டன். நான், அவரது துணை கேப்டன்,’’ என, ரகானே தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்கியா ரகானே. சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பின், ‛ரெகுலர்’ கேப்டன் கோஹ்லி, மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பினார். அடுத்த 3 போட்டிகளுக்கும் கேப்டனாக ரகானே செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2–1 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்நிலையில், வரும் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக கோஹ்லி, துணை கேப்டனாக ரகானே களமிறங்க உள்ளனர். இதுகுறித்து ரகானே கூறியது:

டெஸ்ட் அணிக்கு கோஹ்லி தான் கேப்டன். நான் அவரது துணை கேப்டன். அவர் விளையாடாத போட்டிகளுக்கு அணியை வழிநடத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முழுத்திறமையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. அணியில் கேப்டன் அல்லது துணை கேப்டனாக இருக்கிறோமா என்பது முக்கியமல்ல. அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதே முக்கியம். வரும் காலத்திலும் அணியின் வெற்றிக்கு உதவ விரும்புகிறேன்.

கேப்டன் கோஹ்லியுடன் எனக்கு நல்ல புரிதல் உணர்வு உள்ளது. அவர், எனது பேட்டிங்கை பாராட்டிக் கொண்டே இருப்பார். இந்திய, அன்னிய மண்ணில்  நாங்கள் இருவரும் இணைந்து மறக்க முடியாத சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இது, பேட்டிங் வரிசையில் கோஹ்லி 4வது இடத்திலும், நான் 5வது இடத்திலும் களமிறங்கினால் மட்டுமே சாத்தியம்.

நாங்கள் நிறைய போட்டிகளில் நல்ல ‛பார்ட்னர்ஷிப்’ அமைத்துள்ளோம். ஆடுகளத்தில் இருக்கும் போது ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வோம். எதிரணியின் பந்துவீச்சு குறித்து ஆலோசிப்போம். இது போட்டியில்  சிறப்பாக  செயல்பட உதவும்.  மோசமான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தினார். இது, விரைவில் மீண்டு வர உதவியது.

இவ்வாறு ரகானே கூறினார்.

மூலக்கதை