பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: ஐ.நா., வில் இந்தியா கண்டிப்பு

தினமலர்  தினமலர்
பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: ஐ.நா., வில் இந்தியா கண்டிப்பு

நியூயார்க் : 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் தொடர்பாக, 12 ஆண்டுகளாக நடந்த ஆலோசனைகளை ஒருங்கிணைத்து, விதிமுறைகளின்படி முடிவெடுக்காத வரை, ஒரு பயனும் ஏற்படாது' என, இந்தியாவை உள்ளடக்கிய, 'ஜி4' நாடுகளின் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவை தவிர்த்து, 10 நாடுகள் சுழற்சி முறையில், தலா இரு ஆண்டுகள் வீதம், தற்காலிக உறுப்பினராக இடம் பெற்று வருகின்றன. இந்தியா, இந்தாண்டு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இடம் பெற்றுள்ளது.

எனினும், பல ஆண்டுகளாக, அது நிரந்தர உறுப்பினராக முயற்சித்து வருகிறது. இந்தியாவை போல, தென்னாப்ரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் நாடுகளும், நிரந்தர உறுப்பினராக விரும்புகின்றன. இந்நாடுகள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களை அதிகரிப்பது, அனைத்து நாடுகளுக்கும், 'வீட்டோ' அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து, ஆப்ரிக்க யூனியன், அரபு லீக், ஜி4 நாடுகள் உள்ளிட்ட ஆறு அமைப்புகள் அடங்கிய, சீர்திருத்த ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்து, பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறது.எனினும், பணக்கார நாடுகளின் ஆதிக்கம், மறைமுக தலையீடு ஆகியவை காரணமாக, சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், ஐ.நா.,வின், 75வது ஆண்டு பொதுச் சபையில், முதன் முறையாக, சீர்திருத்த ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய, ஜி4 கூட்டமைப்பு சார்பில், ஐ.நா.,விற்கான ஜெர்மனி துாதர், கிறிஸ்டோப் ஹியுஸ்ஜென் பேசியதாவது:இந்த ஆண்டு, சீர்திருத்தக் குழுவின் நான்கு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக, 12 ஆண்டுகளாக, உறுப்பு நாடுகள் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகளை, ஒரே வடிவமாக்கி விவாதிக்க இருக்கிறோம். அத்துடன், சீர்திருத்தக் குழு விதிமுறைகளைப் பின்பற்றி, நான்காவது கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப் போகிறோம்.இந்த இரு நடைமுறைகளை கடைபிடிக்காத வரை, எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.'இந்தியா - சீனா பதற்றம் தணியும்'கடந்த வாரம், சிக்கிமின், நகுலா பிராந்தியத்தில், சீன ராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சியை, இந்திய ராணுவம் முறியடித்தது. சீன ராணுவத்தினர் விரட்டப்பட்டனர். இதனால், லடாக்கைத் தொடர்ந்து, சிக்கிம் எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஐ.நா.,பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரஸ் கூறும்போது,'' இந்தியா - சீனா பேச்சு மூலம், எல்லைப் பதற்றம் தணியும்,'' என, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை