60 லட்சம் 'டோஸ்' தடுப்பு மருந்து; 9 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி

தினமலர்  தினமலர்
60 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து; 9 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி

நியூயார்க் : 'ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா., சபையில், இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த கருத்தரங்கில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு பேசியதாவது: உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எங்களின் தடுப்பு மருந்துகளை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க, இந்தியா கடமைப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக, இந்தியா தயாரித்துள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.இதுவரை, ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. சில நாடுகளுடன் சேர்ந்து, தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு, பாதுகாப்பு பற்றி, அண்டை நாடுகளுக்கு, இந்தியா பயிற்சியளித்துள்ளது.

கொரோனா பரவல் காலத்தில், 150க்கும் அதிகமான நாடுகளுக்கு, இந்தியா மருத்துவ உதவிகளை செய்துள்ளது. பூட்டான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர் உட்பட அண்டை நாடுகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.

ஐ.நா.,வின் அமைதிப்படைக்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ளதும் இந்தியா தான். கொரோனா பரவலின் போது, அமைதிப்படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றினர். அதனால், அமைதிப்படை வீரர்கள், ஐ.நா., மனிதநேய ஊழியர்கள், ஐ.நா., முன்களப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல்கட்டமாக தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை