32 குழந்தைகளுக்கு தேசிய பால புரஸ்கார் விருது

தினகரன்  தினகரன்
32 குழந்தைகளுக்கு தேசிய பால புரஸ்கார் விருது

புதுடெல்லி: நாடு முழுவதும் இந்தாண்டுக்கான பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் ேமற்கண்ட விருதுகளை பெற்றுள்ளனர். பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்  விருது பெற்றவர்களுடன், பிரதமர் ேமாடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். அதன்படி கலை மற்றும் கலாச்சார துறையில் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வித் திறன் சாதனையில் 5 குழந்தைகளும், விளையாட்டு துறையில் 7 குழந்தைகளும் விருது பெற்றுள்ளன. 3 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுகளையும், தமிழகத்தில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருதும் கிடைத்துள்ளது. விருது பெற்ற இளம் சாதனையாளர்களை பாராட்டியுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகளை வெற்றியாளர்களை ஊக்குவிப்பதோடு மட்டும் அல்லாமல், ஆயிரக்கணக்கான இளம் குழந்தைகளையும் கனவு காண செய்யும். நாடு வெற்றியின் புதிய உச்சத்தை தொடவும்,  வளம் பெறவும் நம்மால் முடிந்ததை செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை