6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 20 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

காலே: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 381ரன் குவித்து ஆல் அவுட்டானது. மேத்யூஸ் 110, டிக்வெல்லா 92, சண்டிமால் 52, திரிமன்னே 43ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழந்து 339 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி மேற்கொண்டு 5 ரன் சேர்த்து ஆல் அவுட்டானது. ரூட் 186, பட்லர் 55 ரன் விளாசினர். இலங்கை தரப்பில் எம்புல்டெனியா 7 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 37 ரன் முன்னிலையுடன் உற்சாகமாக 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 35.5 ஓவரில் 126 ரன்னுக்கு சுருண்டது. எம்புல்டெனியா அதிகபட்சமாக 40 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து தரப்பில் பெஸ் , லீச் தலா 4 விக்கெட், ரூட் 2 விக்கெட் எடுத்தனர்.இதைத் தொடர்ந்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 43.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கிராவ்லி 13, பேர்ஸ்டோ 29, ரூட் 11, லாரன்ஸ் 2 ரன்னில் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய சிப்லி 56 ரன், பட்லர் 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் எம்புல்டெனியா 3, ரமேஷ் ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் வென்ற இங்கிலாந்து, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜோ ரூட் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

மூலக்கதை