தமிழக மக்களின் போர் வீரன் நான் ஈரோடு பிரசாரத்தில் ராகுல் நெகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
தமிழக மக்களின் போர் வீரன் நான் ஈரோடு பிரசாரத்தில் ராகுல் நெகிழ்ச்சி

ஈரோடு:''தமிழக மக்களின் போர் வீரனாக, டில்லியில் செயல்படுவேன்,'' என, ராகுல் பேசினார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, காங்., - எம்.பி., ராகுல், இரண்டாம் நாளான நேற்று, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில், ஈ.வெ.ரா., - முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, ராகுல் பேசியதாவது:

தமிழக மக்களுடன், என் குடும்பத்துக்கு மிக நீண்ட உறவு தொடர்வதால், இங்கு பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இன்றைய டில்லி, தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயல்கிறது. விவசாயிகளை அழித்து, ஒழித்து விட்டனர். அதனால், முதன் முறையாக டில்லி செங்கோட்டையில் இருந்து, குடியரசு தினத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு பதில், விவசாயிகளின் பேரணி நடக்கவுள்ளதை பார்க்கிறோம்.

அ.தி.மு.க.,வை, டில்லி மிரட்டுவது போல, உங்களை யாரும் மிரட்டிவிட முடியாதபடி இருப்பதற்காக வந்துள்ளேன். தமிழக மக்களின் போர் வீரனாக, டில்லியில் செயல்படுவேன். டில்லி அரசின் போக்கிலேயே தமிழக அரசும் உள்ளதால், விரைவில் தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசை மோடி இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் செயல்படுத்த விரும்பும் திட்டங்களை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றுவதால், இந்த அரசை அகற்ற வேண்டும். டில்லியில் ஆட்சி நடத்துகிறவர்கள், தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கு மரியாதை செலுத்தவில்லை. தமிழில் பேசுவதால், தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கின்றனர். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

சிறுவனுக்கு சால்வை



* ஊத்துக்குளியில் இருந்து, தொண்டர் ஒருவரின் தோளில் அமர்ந்திருந்த சிறுவன், ராகுலுக்கு சால்வை அணிவித்தான். அதை மீண்டும் சிறுவனுக்கே அணிவித்தார், ராகுல்.

* ஊத்துக்குளியில், முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், ராகுல் காரில் ஏற முயன்றார். இதையடுத்து, பின்னால் அமர்ந்திருந்த ராகுல், முன் இருக்கைக்கு மாறினார்.

* திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில், இரண்டாவது ரயில்வே கேட்டில், சாலையோரம் நின்ற பெண்களிடம் பேசிய ராகுல், அவர்கள் வைத்திருந்த குழந்தைகளை ஆரத்தழுவி கொஞ்சினார். கருமாரம்பாளையம் பகுதியில், பெண்கள் ஆரத்தி எடுத்து, அவருக்கு நெற்றியில் திருநீறு வைத்தனர்.

மொழி பெயர்த்தவர் மயக்கம்

ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் ராகுல் பேசியதாவது: மக்களாகிய நீங்கள் தான், இந்தியாவின் அசல் சொத்து. மத்தியில், ஆறு ஆண்டுகளாக என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மக்களை கருத்தில் கொள்ளாமல், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்கிறது. ஆனால், ஏழை மக்கள், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதில் பின் வாங்குகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையில், ராகுல் பேச்சை, தமிழில் மொழி பெயர்த்து கொண்டிருந்த முகமது இம்ரான், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அவரை ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மூலக்கதை